மின்சார திருத்த சட்டமூலம் நிறைவேறியது!

மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்த வாக்களிப்பில் 13 பேர் கலந்துகொள்ளவில்லை.
    
குறித்த சட்டமூலம் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மின்சார திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் இடம்பெற்ற நிலையில் இறுதியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பை கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் வாக்கெடுப்பில் மின்சார திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்த நிலையில் எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,ஜே .வி.பி.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்களித்தன. அதன் பிரகாரம் 84 மேலதிக வாக்குகளினால் இத் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி . தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதேவேளை மின்சார திருத்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டிசல்வா முன்வைத்தபோதும் அதனை அரசாங்கம் நிராகரித்தது.

அதனைத்தொடர்ந்து அதற்காக அவர் வாக்கெடுப்பு கோரிய நிலையில் எதிர்க்கட்சியின் திருத்தத்துக்கு, சட்ட முலத்துக்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். அதற்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கிணங்க எதிர்க்கட்சியின் திருத்தங்கள் அதன் மூலம் நிராகரிக்கப்பட்டன.

அந்த வாக்களிப்பின் பின்னரும் சட்ட மூலத்தின் 4 ஆவது அத்தியாயம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பு கோரியதால் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட்டது.
அந்த வாக்களிப்பில் சட்டமூலத்தை அவ்வாறே நிறைவேற்ற ஆதரவாக 116 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் சட்டமூலத்தின் அனைத்து அத்தியாயங்களும் சபையில் நிறைவேற்றப்பட்டன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!