வன்முறைகள் குறித்து விசாரிக்க பொதுநலவாய நாடாளுமன்ற செயலாளருக்கு அழைப்பு!

நாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொதுநலவாய சபையின் நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவித்திருக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
    
நாடாளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார்.

நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் பராாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மிகவும் மிலேச்சத்தனமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் கொலை, அவரது குடும்பத்துக்கு மாத்திரமல்ல, நாடாளுமன்றத்துக்கும் விழுந்த அடியாகும். அவரையும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியையும் ஏன் இவ்வாறு கொலை செய்தார்கள் என்ற விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கவுக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ஷ்வை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என ஆரம்பத்தில் இருந்து குரல் எழுப்பி வந்தவர்.

அப்படியாயின் ஏன் அவரை தாக்கவேண்டும். அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தற்போது இனம் காணப்பட்டு வருகின்றனர்.

அன்றைய தினம் பல வீடுகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன.. வெளி பிதேசத்தில் இருந்து வந்தவர்களே இதனை செய்திருக்கின்றனர் என்பது அந்த பிரதேச மக்கள் பலரும் எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.

எனவேஇதுதொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். இலங்கையில் விசாரணை நடத்துவதில் பிரச்சினை இருப்பதாக இருந்தால், விசேடமாக, காலி முகத்திடல் சம்பவம் உட்பட அனைத்தையும் விசாரணை செய்யுமாறு கோரி பொது நலவாய சபையின் நாடாளுமன்ற சபையின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பிக்குக்கு எழுத்துமூலம் தெரிவித்திருக்கின்றேன். அதனால் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் சபாநாயகரும் அவருடன் பேச வேண்டும் என கேட்டுக்கொள்கினறேன் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!