நான் ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல! சுதந்திரமான பிரதமர் – ரணில் பதிலடி

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப 18 மாதங்களாவது செல்லும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

WION என்ற இந்திய செய்தி நிறுவனத்தின் குளோபல் லீடர்ஸ் சீரிஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போதே ரணில் விக்ரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சீனா கைவிட்டு விட்டதாக கூறப்படும் கூற்றையும் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார்.

கோட்டாபயவின் கருத்து ஏற்புடையதல்ல
அத்துடன் இலங்கை தொடர்பில் சீனா குறைந்தளவான அக்கறையை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருப்பதை அவர் மறுத்துள்ளார்.

எனினும் சீனாவிடம் இருந்து பொருளாதார உதவிகள் குறித்து இன்னும் உரிய பதில்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, இலங்கை தொடர்பில் அதிக அக்கறையை காட்டி வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின்போது, ஏனைய நாடுகளை காட்டிலும் இந்தியா தாமாக முன்வந்து இலங்கைக்கு உதவி செய்தது. ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் தமக்கும் இடையில் கொள்கை வித்தியாசங்கள் உள்ளபோதும், அவற்றை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்வதாக ரணில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது வெளிநாட்டு ஒதுக்கங்களாக 50 மில்லியன் டொலர்கள் அளவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

21 தாமதத்துக்கு காரணம்

21வது அரசியலமைப்பு திருத்த நகலை, கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்காமைக்கு, வரைவின் தயாரிப்பு தாமதமானமையே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோசனை வரைவை தயாரித்து முடிப்பதற்கு பிற்பகல் 3மணியான நிலையில், மாலை 4 மணி அமைச்சரவைக் கூட்டத்துக்கு அதனை சமர்ப்பிக்கமுடியவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை 21 வது யோசனைக்கு ஆளும் பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியும் ஆதரவளிக்கும் உறுதியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு தமது தற்போதைய அரசாங்கம் மற்றும் முன்னைய அரசாங்கங்கள் அனைத்தும் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் சுதந்திரமான பிரதமர்
தாம் தற்போதைக்கு சுதந்திரமான பிரதமர் என்று குறிப்பிட்டுள்ள ரணில், தாம் ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியல் நெருக்கடி தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் கோட்டாபய பதவி விலகவேண்டும் என்று கோரப்படுகிறது.

சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்று கோருகிறது. மற்றும் ஒரு தரப்பு ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று கோருகிறது.

இந்தநிலையில் இந்த தரப்புக்கள், தமக்குள் கலந்துரையாடி ஒரு பொதுக்கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!