தங்க கடத்தல் வழக்கில் முதல்வருக்கும் தொடர்புள்ளது: ஸ்வப்னா பகீர் குற்றச்சாட்டு!

இந்திய மாநிலம் கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்வப்னா சுரேஷ், தன்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பிணையில் வெளியே வர இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவருக்காக கிருஷ்ணராஜ் என்ற வழக்கறிஞர் கடத்தல் வழக்கில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர் ஒருவரை, சமூக வலைதளத்தில் விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    
இதனால் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், ஸ்வப்னா சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து, பாலக்காட்டில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அனைவர் மீதும் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார். மேலும், ரகசிய வாக்குமூலத்தில் அளித்த புகார்களில் இருந்து எந்த காரணம் கொண்டும் பின் வாங்கப்போவதில்லை என்றும் கூறினார்.

தனது வழக்கறிஞர் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அவர், ‘எனது வழக்கறிஞரின் பழைய பேஸ்புக் பதிவு தொடர்பாக பொலிஸார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்னை சார்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள். என்னை காயப்படுத்துங்கள். தயவுசெய்து என்னை கொன்று விடுங்கள், அத்துடன் எல்லா கதைகளும் முடிந்துவிடும்’ என கண்ணீர் விட்டு அழுதார்.

இதற்கிடையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால், அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!