அதிகரிக்கும் லாக் அப் மரணங்கள்: என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் தொடர்ந்து லாக் அப் மரணங்கள் நடைபெற்று வருவதற்கு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் ஆகியோர் லாக் அப்பில் மரணம் அடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த விசாரணைக் கைதி ராஜசேகர் லாக் அப்பில் மரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    
அப்பு (எ) ராஜசேகர் என்பவர் மீது சோழவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க கொடுங்கையூர் போலீசார் ராஜசேகரை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

லாக் அப் மரணமா?
2 நாட்களுக்கும் மேலாக ராஜசேகரை காவல் நிலையத்திலேயே போலீசார் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென ராஜசேகருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிபிசிஐடிக்கு மாற்றம்
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை சென்னை காவல்துறை ஆணையர் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து கொடுங்கையூர் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெய்சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகிய 5 பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இன்று காலை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் லட்சுமி தலைமையில் விசாரணையானது தொடங்கியுள்ளது.

மரணத்தில் சந்தேகம்
காவல் நிலையத்தில் ராஜசேகர் இருக்கும் போது அவருடைய உடல்நிலை சரியில்லை என்றால் அங்கேயே முதலுதவி அளித்திருக்கலாம் அல்லது 108 ஆம்புலன்சை வரவழைத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் பெயர் குறிப்பிடாமல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதற்குப் பின் அரசு மருத்துவமனைக்கு ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள்ளார்.

இழப்பீடு வழங்க கோரிக்கை
அதேபோல் கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் அதன் புறக்காவல் நிலையம் ஆகியவற்றில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு கோரியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் லாக் அப் மரணங்கள் இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!