வீடு புகுந்து திருடிய நகைகளை மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒப்படைத்த திருடன்!

கேரள மாநிலம் கொல்லம் அருகே அம்பலப்புழா கருமாடி என்ற இடத்தைச் சேர்ந்த மதுக்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை யாரோ திருடிச் சென்றிருந்தனர்.

இது பற்றி மதுக்குமார் அம்பலப்புழா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய திருடனை தேடி வந்தனர். இதற்கிடையில் திருட்டு நடந்து 2 நாட்கள் கடந்த நிலையில் திருட்டு நடந்த வீட்டின் முன்பு காலையில் பார்த்த போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பு ஒரு பார்சலும், அதன் அருகே கடிதம் ஒன்றும் இருந்தது. பார்சலை பிரித்து பார்த்த போது அதில் அவர்கள் வீட்டில் திருடப்பட்ட நகைகள் இருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த கடிதத்தை நகைகளை திருடிச்சென்ற திருடனே எழுதி இருந்தான். அந்த கடிதத்தில் என்னை மன்னிக்க வேண்டும். எனது கஷ்ட நிலை காரணமாக உங்கள் வீட்டில் திருடி விட்டேன். திருடி விட்டு எனது வீட்டிற்கு சென்ற பிறகு எனக்கு தூக்கமே வரவில்லை. நிம்மதி இழந்த நிலையில் காணப்பட்டேன். எனவே மீண்டும் நகைகளை உங்களிடமே ஒப்படைக்கிறேன். மன்னிப்பு… மன்னிப்பு… மன்னிப்பு…. என்று எழுதப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மதுக்குமார் அந்த நகைகளுடன் அம்பலப்புழா போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரங்களை கூறினார். மேலும் திருடன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார். நடந்த விவரங்களை கேட்ட போலீசார் நகைகளை திருடிய திருடனே மீண்டும் நகைகளை ஒப்படைத்தாலும் அந்த திருடன் யார் என்பதை கண்டு பிடிக்க தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்று கூறி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!