இந்திய சரக்குக் கப்பல் காலி அருகே கடலில் மூழ்கியது – 7 மாலுமிகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சிறிய சரக்குக் கப்பல் காலிக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கியது. இதில் இருந்த 7 இந்திய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

கடந்த 14ஆம் நாள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு, ‘எம்எஸ்வி மரிய ரொபேர்ட் இருதய விஜய்’ என்ற நடுத்தர சரக்குக் கப்பல், புறப்பட்டுச் சென்றது.

நடுக்கடலில் இயந்திரம் பழுதடைந்ததால், கப்பலுடனான அனைத்து தொடர்புகளும் இல்லாமல் போனது. இந்தநிலையில், கப்பலைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக மாலைதீவு அரசாங்கம் வழங்கிய தகவலின் அடிப்படையில், சிறிலங்காவுக்குத் தென்பகுதி வழியாக பயணம் செல்லும் கப்பல்கள், படகுகளுக்கு சிறிலங்கா கடற்படை தகவல் வழங்கியிருந்தது.

இந்த நிலையில், ‘சகான் புத்தா’ என்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று, நிர்க்கதியாக இருந்த இந்திய கப்பல் தொடர்பான தகவலை சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியது.

இதையடுத்து, காலி துறைமுகத்தில் இருந்து 68 கடல் மைல் தொலைவில், மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து, 7 இந்திய மாலுமிகளையும், சிறிலங்கா கடற்படையின் பி-490 இலக்க அதிவேக தாக்குதல் படகு மீட்டது.

நேற்றுக்காலை மீட்கப்பட்ட 7 இந்திய மாலுமிகளும், காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,