தமிழகத்தை உலுக்கிய ஆணவக்கொலை: கொந்தளித்த கமலஹாசன்!

கும்பகோணத்தில் புதுமணத் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மோகன்-சரண்யா காதல் ஜோடி, வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.
    
அதனைத் தொடர்ந்து, சரண்யாவின் வீட்டிற்கு புதுமணத் தம்பதி விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். விருந்து முடிந்ததும் பெண்ணின் அண்ணன் இன்னொரு நபருடன் சேர்ந்து தங்கையையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த ஆணவப்படுகொலை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொலை செய்வது கௌரவமா? கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!