சர்வதேச நாணய நிதியத்தை நாடாமையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்..!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை உரிய நேரத்தில் கோரியிருந்தால்  இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள  பொருளாதார நெருக்கடியினை தவிர்த்து செயற்பட்டிருக்கலாம் என மத்திய வங்கியின்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச சமூகத்திடம் இருந்து உதவிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால் நெருக்கடி நிலைமை  மேலும் அதிகரிப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச  சமூகத்தின் ஆதரவுடன் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு தேவைப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினை பெறுவதற்கான தீர்மானத்தினை முன்னதாக மேற்கொண்டிருந்தால் நாட்டில் இவ்வாறான  நிலைமை ஏற்பட்டிருக்காமல் தவிர்த்திருக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை தற்போது எதிர்கொண்டுள்ளதாக  மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் இலங்கை சீனாவிடம் இருந்து கணிசமானளவு கடன் பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும்,  சிறந்த  நட்பு நாடாக சீனா தொடர்ந்தும் கடன் மற்றும் நிவாரண உதவிகளை இலங்கைக்கு வழங்குமென தாம் உறுதியாக நம்புவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!