ரொறன்ரோவில் பயங்கரம்: பட்டப்பகலில் உயிருடன் கொளுத்தப்பட்ட இளம் பெண்!

ரொறன்ரோ பேருந்து ஒன்றில் பட்டப்பகலில் இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சையில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
    
மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ள பொலிசார், கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி பகல் சுமார் 12.30 மணியளவில் கிப்லிங் அவென்யூ மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதிக்கு ரொறன்ரோ பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

இளம் பெண் ஒருவர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் பெண் மீது திரவப் பொருளை ஊற்றி பற்றவைத்ததாகவும், இதனால் தீ மூண்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் குறித்த பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் சன்னிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் தற்போது இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், ரொறன்ரோவின் ஷெர்போர்ன் சுரங்கப்பாதை நிலையத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!