பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஒத்துழைக்கத் தயார்!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள்ளிருந்து ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் க்ளேயார் ஒனீல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்

உத்தியோக விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர்நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

சட்ட விரோத குடியேற்றம் மற்றும் ஆட் கட்டத்தல் என்பவற்றுக்காக கொன்சவேடிவ் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளையே தொழிற்கட்சியும் பின்பற்றுவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.

சட்ட விரோத குடியேற்றத்தினை தடுப்பதற்காக தான் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, கடற்படையினர் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் கப்பல், தொழிநுட்ப மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , இரு நாடுகளும் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் அவுஸ்திரேலியா மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து சமுத்திரத்தை பாதுகாப்பு வலயமாக பேணுவதற்கு தமது அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடற்படையினர் 50 பேர் விசேட பயிற்சிகளுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவ்வாறான பயிற்சிகளின் போது இந்நாட்டு பாதுகாப்பு படையினருடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

சுங்க நிர்வாகத்தில் அனுபவத்தை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்யவும் அவுஸ்திரேலியா உதவும் என்று அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மீனவர்களை ஒழுங்குபடுத்துவதற்கும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர இலங்கையை மையமாக மாற்றுவதற்கும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!