அரசியலமைப்பு திருத்தத்தினால் நெருக்கடி தீராது!

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாலும், அரசியலமைப்பை திருத்தம் செய்வதாலும் நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து மீள முடியாது. தனி நபரினதும்,அரசியல் கட்சிகளினதும் தேவைக்காக மாத்திரமே அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
    
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையினை சிறுபிள்ளை கூட நன்கு அறியும்.

சிறு பிள்ளைகளின் வாழ்க்கையிலும் தற்போதைய பொருளாதார பாதிப்பு நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளன. பொருளாதார பாதிப்பிற்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் ஏதாவதொரு வழிமுறையில் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த இரண்டு வருடகாலமாக செயற்படுத்திய தவறான பொருளாதார கொள்கை பொருளாதார பாதிப்பினை துரிதமாக தீவிரப்படுத்தியுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக்கொண்ட தரப்பினர் திட்டமிட்ட வகையில் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியள்ளார்கள். நாட்டு மக்கள் முழு அரச கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள்.225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 50 சதவீதமானோர் தவறான வர்த்தகங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுப்படுகிறார்கள். 35 சதவீதமானோர் அவற்றை தவறு என்று தெரிந்தும் தமது அரசியல் இருப்பிற்காக அதனுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.

15 சதவீதமானோர் மாத்திரம் தவறான அரசியல் செயலொழுங்கினை மாற்றியமைப்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.இந்த 15 சதவீதமானோரால் மாத்திரமே என்றாவது நாட்டை முன்னேற்ற முடியும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தமக்கு தேவையானோரின் பெயரை பரிந்துரை செய்து சர்க்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதால் மாத்திரம் நாடு எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல நடவடிக்ககைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் தனி நபர் தேவைக்காகவும்,கட்சியின் தேவைக்காகவும் தான் அரசியலமைப்பை திருத்தம் செய்துள்ளன.அரசியலமைப்பு திருத்தம் செய்வதால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாலும், அரசியலமைப்பை திருத்தம் செய்வதாலும் நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள முடியாது.சிறந்த துறைசார் தரப்பினரை ஒன்றிணைத்து புதிய கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.ஊழல் மோசடி,முறைக்கேடான நிர்வாகம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டால் நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!