பொருளாதார பின்னடைவிற்கு தமிழ் தேசிய பிரச்சினையே காரணம்!

இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    
ஊழல், தவறான நிர்வாகம், அனாவசியமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை போன்றன தற்போதைய பொருளாதார நெருக்கடி உருவாக ஒரு காரணமாக இருந்தாலும் கூட தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசைகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினையே 30 வருட யுத்தத்திற்கும் அதற்காக செலவிடப்பட்ட பாரிய நிதிக்கும் வழிவகுத்ததாக தெரிவித்துள்ள சம்பந்தன், யுத்தம் இடம்பெறாதிருந்தால் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வு காணப்படாத தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கு தீர்வு காண்பதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை புதிய முகத்தினை காட்ட முடியும் எனவும் , நாட்டின் அனைத்து மக்களும் தங்களின் இறைமையை பயன்படுத்தக்கூடிய வகையிலான ஒரு அரசியல் யாப்பின் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றி, நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் உலகிற்கு நாம் ஒற்றுமையாக உள்ளோம் என்பதையும் காண்பிக்க முடியுமெனவும் குற்றிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!