அவசரமாக இந்தியாவிடம் எரிபொருளை பெற முயற்சி!

இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் அவசர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
    
அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம் இரண்டு வாரங்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் வழங்கல் மற்றும் விநியோகிப்பது தொடர்பில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து இந்த சந்திப்பில் இலங்கை தூதுவர் எடுத்துரைத்துள்ளார் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் நெருக்கடிகள் குறித்தும் அவர் விபரித்துள்ளார்.

கடனுதவி மூலம் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இந்தியா வழங்கிய உதவிக்காக நன்றி தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட தற்போது இலங்கைக்கு தேவையாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசலை அவசர அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இந்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள உடனடி நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு இந்தியாவும் இலங்கையும் எந்த வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.
இந்தசந்திப்பின்போது பெட்ரோலிய எண்ணெய் எரிவாயு துறைகளில் இருநாடுகளும் எவ்வாறு நீண்டகால உறவுகளை பேணலாம் என்பது குறித்து இரு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!