வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம் – விக்கி எம்.பி கவலை

வடகிழக்கு தமிழ் மக்களின் இன்றைய நிலைமை அப்படியே ஸ்தம்பித்து நிற்பது தான் என யாழ்ப்பாண நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலை
இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 30 வயது நிறைந்த ஒரு பெண் எமது நல்லூர் வாசஸ்தல எல்லைக்கு அண்மியதாகத் தெருவில் மயங்கி விழுந்து கிடந்தார். ஒரு வயதான அம்மா அவரை பார்த்துவிட்டு பதைபதைத்து பாதுகாப்பு பொலிஸ் அலுவலரிடம் முறையிட்டார்.

அந்த அம்மையாரும் சுற்று வட்டாரத்தில் இருந்தவர்களும் விழுந்து கிடந்தவருக்கு மூர்ச்சை தெளிவித்து தண்ணீரும் சாப்பிட உணவும் வாங்கிக் கொடுத்தார்கள். அவரை எமது இல்லத்திற்கு அழைத்து வந்து விசாரித்தோம்.

திருமணமானவர், கணவருக்கு ஒரு கண் தெரியாது, வேலையில்லை, ஒன்றரை வயதில் ஒரு மகன், இவர் வேலை தேடி அலைந்துள்ளார், அன்று சாப்பிடவில்லை, மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு போதிய உதவிகள் செய்து நாம் அனுப்பிவிட்டோம். அந்த வயதான அம்மா தன்னிடம் இருந்த 300 ரூபாவை குறித்த பெண்ணுக்காக செலவழித்தார்.

பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப்படுத்தி நீர், குளிர்பானம், உணவு கொடுக்க எம் மக்கள் முன்வந்தமை பாராட்டுக்குரியது. ஆனால் இவ்வாறான நிலைமை வருங்காலத்தில் அதிகரிக்க இடமுண்டு.

திருட்டுக்கள், கொள்ளைகள் பெருவாரியாக நடைபெற வாய்ப்பிருக்கின்றது. முக்கியமாக சைக்கிள் திருட்டுக்கள் அதிகமக காணப்படுகின்றது.

ஆகவே தற்போது நாம் வருங்காலத்தைப் பற்றித் திட்டமிட வேண்டியுள்ளது. இன்றைய நிலைக்கு யார் காரணம்? அவர்களுக்கு நாம் என்ன தண்டனை வழங்க வேண்டும்? எவ்வாறு இன்றைய நிதி நிலைமையைச் சீராக்கலாம்? என்று சிந்திப்பதைக் காட்டிலும் இனி வருங்காலத்தில் எமது மக்கள் தமது துயர் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக இருக்கின்றது.

நாங்கள் இன்றைய நிலைமையை எமக்குச் சாதகமாக மாற்ற வேண்டும். எமது கட்சி 2018 லேயே தன்னாட்சி, தற்சார்பு, தன்நிறைவு என்ற வாசகங்களைக் கட்சியின் எதிர்பார்ப்புக்களாக முதல் நிலைப்படுத்தியிருந்தது.


அரசியலில் கூட்டு சம முறையிலான தன்னாட்சி, சமூக ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்சார்பு, பொருளாதார ரீதியாக தன்நிறைவு என்பவையே எமது குறிக்கோள்களாக இருந்து வருகின்றன.

அரசியலில் தன்னாட்சி பெற நாம் உழைத்துக் கொண்டே மக்களைத் தற்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று ஊக்கி வருகின்றோம். தற்சார்பு நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் தமிழகம் தன்நிறைவு காண வேண்டும் என்று கூறி வருகின்றோம்.

அன்று நாம் கூறியவற்றையே இன்று யாவரும் கூறிவருகின்றார்கள். தமிழர்களாகிய நாங்கள் வரலாற்று ரீதியான பாரம்பரியம் உடையவர்கள். “மதியாதார் முற்றம் மதித்தொருகால் மிதியாமை கோடி பெறும்” என்றார் ஒளவையார்.

எம்மை மதியாத சிங்கள அரசாங்கத்தை மதித்து அவர்களிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது காலத்தை வீணடிப்பதாகும். நாம் எம்மைப் பாதுகாத்து பராமரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களிடம் கையேந்துவதை வெட்கக்கேடான செயலாக பார்க்க கற்று கொள்ள வேண்டும். எனவே நாம் தற்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட முன்வரவேண்டும்.

எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு தேவையானவற்றை நாமே தயாரிப்பதே தற்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது. புலிகள் காலத்தில் நாம் தற்சார்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.போரின் பின்னர் பிச்சைப் பாத்திரம் ஏந்த பழகிக் கொண்டுள்ளோம்.


எதற்கும் மற்றவர்களை எதிர்பார்ப்பதே இன்றைய எமது கலாசாரம். அரசாங்கம் என்ன தருவார்கள், உத்தியோக பற்றற்ற அமைப்புக்கள் என்ன தருவார்கள், கொடையாளர்கள் என்ன தருவார்கள், எமது வெளிநாட்டு உறவுகள் என்ன தருவார்கள் என்றெல்லாம் உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
எமது வாழ்க்கையை நாமே முன்னேற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்று பொதுவாக எம்மவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை. வட கிழக்கு தமிழ் மக்களின் இன்றைய நிலைமை என்ன என்று கேட்டால் நாம் யாவரும் ஸ்தம்பித்து நிற்கின்றோம் என்பது தான் இன்றைய நிலைமை.

இதிலிருந்து விடுபட்டு தற்சார்பு நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும். எம்மை நாடி வந்திருக்கும் இன்னல்கள் எம்மை சுய பலத்துடன் சிந்திக்கவும் செயலாற்றவும் உதவி புரிய வேண்டும்.
சேர்ந்து செயலாற்ற நாம் இனி பழகிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அயலவர் நால்வர் தத்தமது வாகனங்களுக்கு எரிபொருள் வாங்கி தனித்தனியாக தமது வாகனங்களை ஓட்டுவதிலும் பார்க்க ஒவ்வொருவரும் வாய்ப்பெடுத்து மற்றைய மூவரையும் தமது வாகனங்களில் ஏற்றி செல்வது எரிபொருள் சேமிப்புக்கு உதவும் மற்றும் அயலவரிடையே அன்னியோன்யத்தையும் வளர்க்கும்.

முன்னேற்றம் வேண்டும்
இளைஞர் யுவதிகள் தமது காலத்தை வீணடிக்காமல் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை வெளிக்கொண்டுவர எத்தனிக்க வேண்டும். செயற்கை உரம் இல்லாது இயற்கை உரத்தாலேயே போதிய அறுவடையைப் பெற முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

போக்குவரத்தை லேசாக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆராயலாம்.“தேவைதான் கண்டுபிடிப்புக்களின் தாய்” என்பார்கள். எமக்கு இன்று தேவைகள் பல இருக்கின்றன.அவற்றை பூர்த்தி செய்ய எந்தவிதமான புதிய யுக்திகளைக் கையாளலாம் என்று எம் மக்கள் சிந்திக்க வேண்டும். சும்மா அரசாங்கத்தையும் மற்றவர்களையும் குறை கூறுவதை நிறுத்தி தற்போதைய சவால்களை நாம் எவ்வாறு முறியடிக்கலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

ஆகவே இன்றைய நிலைமையை எமக்கு இறைவன் ஈந்த ஒரு வரப்பிரசாதமாகவே நான் பார்க்கின்றேன். வீட்டு தோட்டத்தை வளர்த்து வருகின்றோம். காரியாலய காணியில் தோட்டம் அமைத்துள்ளோம்.

மேலும் தோட்ட நிலமொன்றை குத்தகைக்கெடுத்து பலவித பயிர்களை அங்கு பயிரிட்டு உருவாக்கி வருகின்றோம். நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைய பல மாதங்களாகும்.

பட்டினி, பஞ்சம், நோய் நொடிகள் எம்மை பாதிக்காத மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டும். காணிகளை வெறுமனே இருக்கவிடாதீர்கள். பயிரிடுங்கள் வங்கியில் கடன் பெற்றாவது உங்கள் தரிசு நிலங்களை வளம் கொழிக்கும் நிலங்களாக மாற்ற எத்தனியுங்கள்.

இன்றைய எமது நிலைமை எம்மை தன்னாட்சி, தற்சார்பு, தன்நிறைவு நடவடிக்கைகளில் ஊக்கமுடன் பயணிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என அவ்ர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!