22 ஆவது திருத்தம் – சுதந்திரக் கட்சி நிராகரிப்பு!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும். 19 ஆம் திருத்தத்தை மீண்டும் ஸ்தாபிப்பதாக ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
    
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 7 தினங்களில் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்துக்கு உள்வாங்கப்படும். என்றாலும் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் 22 ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பு சபையின் சுயாதீனம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அரசியலமைப்பு சபையின் பெரும்பான்மை அரச தரப்புக்கே இருக்கின்றது. அதேபோன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படும் உறுப்பினர்களை நீக்குவதற்கும் அவருக்கும் முடியும்.
இதன் மூலம் அரசியலமைப்பு சபையின் சுயாதீனத்தன்மை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்திருந்த திருத்தங்கள் இதில் இல்லை.

அத்துடன் 19 ஆம் திருத்தத்தில் இருக்கும் அதிகமான விடயங்களை அரசியலமைப்பு திருத்தத்தின் போது மீண்டும் ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் 22 ஆவது திருத்தத்தில் அவ்வாறு எதுவும் இல்லை.

20ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் அவருக்கு தொடர்ந்து இருக்கும் வகையிலேயே இந்த அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அடுத்துவரும் ஜனாதிபதிக்கே அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

அதனால் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கும் 22ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. அதனால் 22ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்லவும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!