ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பும் வீழ்ச்சியடையும்!

சுகாதாரத்துறைக்கான எரிபொருளை பெற்றுக்கொடுக்க தவறினால் அடுத்த இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பும் வீழ்ச்சியடையும். அதுமட்டுமல்லாது வைத்திய கட்டமைப்பு வீழ்ச்சி கண்டால் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
    
பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நெருக்கடி குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடையாது கொண்டு செல்ல வேண்டுமானால் சுகாதார தரப்பினருக்கான எரிபொருளை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் அடுத்த இரண்டு வாரங்களில் சுகாதார கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடையும் என்ற காரணிகளை இவர்கள் பிரதமரிடத்தில் முன்வைத்துள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்டுள்ள எரிபொருளை முக்கியமான துறைகளுக்கு வழங்க வேண்டும், இல்லையேல் அடுத்த இரண்டு வாரங்களில் வைத்திய கட்டமைப்பும் வீழ்ச்சியடையும் நிலையே காணப்படுகின்றது.

அவ்வாறு நடந்தால் இறுதியாக மக்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும். இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய விடயங்களை அரசாங்கம் கருத்தில் கொண்டு அதற்கமைய செயற்பட வேண்டும் என்ற காரணிகளையும் முன்வைத்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், சர்வதேச நாடுகளிடம் இருந்து அத்தியாவசிய மருந்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமரிடத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் குறித்து தாம் கூடிய கவனம் செலுத்துவதாக பிரதமர் வாக்குறுதியளித்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!