கேரளாவில் கல்லூரி மாணவியை கடித்துக்கொன்ற நாய்!

இந்திய மாநிலம் கேரளாவில் இளம்பெண் ஒருவர் நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கேரளா மாவட்டத்தில் உள்ள மங்காராவில் கல்லூரி மாணவர் ஒருவர் தேவையான தடுப்பூசியை எடுத்துக்கொண்ட போதிலும் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வியாழக்கிழமை உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
    
ஸ்ரீ லக்ஷ்மி என்ற 19 வயது பெண், தனது அண்டை வீட்டாரின் நாயால் கடிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு மருத்துவர்களின் பரிந்துரையின்படி தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் அவர் எடுத்துக்கொண்டதாகவும் அவரது உறவினர்களை மேற்கோள் காட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மே 30-ஆம் திகதி கல்லூரிக்குச் சென்றபோது அவரை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்ப நாட்களில் அவருக்கு எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.

சில நாட்களுக்கு முன்பு ரேபிஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியபோது, ​​​​அவர் முதலில் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அதிக காய்ச்சலுடன் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நேற்று (வியாழன்) அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!