பாழடைந்த மருத்துவமனையில் கிடந்த சடலங்கள்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதி கண்டிவாலி. இங்கு பாழடைந்த மருத்துவமனை ஒன்று உள்ளது. பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டதால் அந்த மருத்துவமனையில் கிரண் தேவி என்ற பெண் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
    
இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் சிலர் உயிரிழந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிசார் உடனடியாக மருத்துவமனை கட்டிடத்திற்கு விரைந்தனர்.

அங்கு கிரண் தேவியும் அவரது மகள் முஷ்கனும் ஒரு அறையில் சடலமாக கிடந்தனர். மற்றோரு அறையில் இன்னொரு மகளான பூமியும், அவரின் அருகே ஆண் நபர் ஒருவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் இருந்து சில கடிதங்களும் பொலிசாருக்கு சிக்கியது. அதன் பின்னர் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் அடித்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்திருந்த ஆணின் பெயர் ஷிவ்தயால் சென் என்பதும், அவர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அந்த நபர் கிரண் தேவி உட்பட மூன்று பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!