நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – ஹர்ஷ டி சில்வா கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி புதிய அணியொன்றுக்கு நாட்டை மீட்டெடுக்க இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் தமது பிரிவினர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகப்படியான பணம் அச்சடிக்கப்பட்டதன் விளைவுகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடனை மறுசீரமைக்கத் தவறியதன் விளைவுகள் குறித்தும் எச்சரித்ததாக அவர் கூறினார்.


பதவி விலகுவதற்கு காலக்கெடுவை வழங்க வேண்டும் 

அவ்வாறான அனைத்து எச்சரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மோசமான முடிவு மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த நாடும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி இனியும் பதவியில் இருக்க முடியாது எனவும், வேறு ஒரு அணியை பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலக முடியாவிட்டால் அதற்கான காலக்கெடுவை வழங்க வேண்டும் என்றார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு ஒற்றைக் கட்சி அரசாங்கத்தினால் தீர்வு காண முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும்.

20 மில்லியன் இலங்கையர்களின் துன்பங்களை அவதானிக்கும் போது இனியும் பொறுமை காக்க முடியாது என்பதால் பிரச்சினைகளை தீர்க்க சகல உதவிகளையும் வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!