அங்கீகரிக்கப்பட்ட நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே அமெரிக்க நிதியுதவி!

உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே தமது நாடு நிதியுதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
    
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்காக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினருக்கு அவசியமான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்காக சில மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்காவினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே தூதுவர் ஜுலி சங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
‘மேற்பார்வை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன அமெரிக்காவினால் வழங்கப்படும் உதவித்திட்டங்களுக்கான அடிப்படைக்காரணிகளாகும்.

அதன்படி உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே அமெரிக்கா உதவிகளை வழங்கும். இதன்மூலம் உதவியாக வழங்கப்படும் நிதி சரியான முறையில் கணிப்பிடப்படுவதுடன், அது உரிய தரப்பினரைச் சென்றடைவதையும் உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!