தேசிய பாதுகாப்பு என்னவானது?

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாகக் கூறியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இன்று தேசிய பாதுகாப்பு பூச்சியமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதிகளுக்கு வழமையைப் போன்று செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
    
அத்தோடு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் 20 இல் காணப்பட்டதை விட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு கூடும் போது வலியுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்து பொதுஜன பெரமுன 2019 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இன்று தேசிய பாதுகாப்பிற்கு என்னவாகியுள்ளது? அன்று என் மீது அனைவரும் குற்றஞ்சுமத்தினர்.

ஆனால் இன்று மிரிஹானையிலுள்ள ஜனாதிபதி இல்லம், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என அனைத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் சாதாரணமாக எவரும் அந்த பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இதுவா தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முறைமை என்று அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புகின்றேன். இன்று தேசிய பாதுகாப்பு பூச்சியமாக்கப்பட்டுள்ளது.

21 ஆவது அரசியலமைப்பு குறித்து பேச ஆரம்பித்த போது நாம் அதனை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தோம். எனினும் தற்போது நாட்டு மக்கள் உட்பட அனைவரதும் எதிர்பார்ப்பிற்கு முரணான அரசியலமைப்பு திருத்தமே கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூவரிடமும் நிறைவேற்றதிகாரம் பகிரப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு அப்பால் நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் சபாநாயகருக்கு கிடையாது. எனவே இந்த விடயத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டு;ம் என்பதையே நாம் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றோம்.

அங்கீகரிக்கப்பட்ட சிவில் அமைப்புக்களிலிருந்து மூவர் அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே 19 ஆம் திருத்தத்தில் காணப்பட்ட விடயமாகும்.
ஆனால் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் அரசியலமைப்புசபையின் உறுப்பினர்களை சபாநாயகர் நியமிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் சபாநாயகர் பெயர் குறிப்பிடும் மூவருடன் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரே அரசியலமைப்பு சபையின் அங்கத்தவர்களாக இருப்பர்.

அவ்வாறெனில் அந்த அரசியலமைப்பு சபை பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையாகவே காணப்படும். நாட்டு மக்கள் எதிர்பார்த்தது இதனை அல்ல. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு கூடும் போது முன்வைப்போம்.

அதே போன்று அமைச்சுக்களை நியமிக்கும் போதும் பல ஒழுங்முறைகளை பின்பற்ற வேண்டும் என்ற திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும்.

20 ஐ விட 21 இல் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தில் எம்மால் இணக்கப்பாட்டை எட்ட முடியாத விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்குள்ளும் , வெளியிலும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

அவை தொடர்பில் மக்களுக்கும் தெளிவுபடுத்துவோம். புதிய அரசாங்கமே தற்போது மக்களின் தேவையாகவுள்ளது. அதற்கு எம்மால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வரும் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

அதன் பிரதமர் யாராக இருந்தாலும் , அவர் நிறைவேற்றுசபையின் ஊடாகவே தெரிவு செய்யப்பட வேண்டும். 21 இல் காணப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் விடயங்களுக்கு நாம் ஆதரவளிப்போம் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!