ஜப்பான் உதவப் போவதில்லை என்பது பொய்!

சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு எவ்வித உதவிகளையும் வழங்கப் போவதில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
    
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜப்பான் இலங்கைக்கு உதவப் போவதில்லை என்று அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. நாடு வங்குரோத்தடையாவிட்டால் ஊழியர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றே சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாம் எவ்வாறு கடன்களை மீள செலுத்துவோம் என்பதற்கான ஸ்திரமான வேலைத்திட்டத்தினை முன்வைத்த பின்னரே அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இறுதி தீர்மானத்தை அறிவிக்கும்.

அதற்கமைய கடன் மீள் செலுத்தலுக்கான வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதற்கான ஆதரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் லசார்ட் மற்றும் கிளிபர்ட் அன்ட் சான்ஸ் என்ற உலக பிரபலமான இரு நிறுவனங்களின் உதவியை நாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிறுவனங்களால் கடன் மீள் செலுத்துதல் வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே , சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு இலங்கைக்கு கடனை வழங்கும் என்பதை அறிவிக்கும்.

அதே போன்று ஜப்பான் தூதுவர் நாட்டுக்கு உதவ மறுத்துள்ளதாகவும் போலி செய்திகள் வெளியாகியுள்ளன. இவை நாட்டிலுள்ள நெருக்கடிகளை மேலும் உக்கரமடையச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாகும்.

நெருக்கடிகளை தீர்க்கும் பொறுப்பினை எவரும் ஏற்காத சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதற்காக அவருக்கு எதிராக கோஷமெழுப்புவது பொறுத்தமற்றது.

நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும் நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தைக் காட்டிக் கொடுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் நாட்டையும் வெற்றி கொள்ள முடியாது. போராட்டங்களையும் வெற்றிகொள்ள முடியாது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!