மஹிந்த, ரணில்,பசிலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க முடிவு!

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற பொறுப்புள்ளவர்களுக்கு எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவதற்கு உயர்நீதிமன்றம், தீர்மானித்தது.
    
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 27ஆம் திகதி இரண்டு அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களையும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, பிரபல இலங்கை நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நஷனல் உட்பட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர், தற்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் நாணயச் சபை ஆகியோர் உட்பட 39பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக்குறைப்பும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய அமர்வின் பொது, பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் அஜித் நிவார்ட் கப்ரால் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது சேவை பெறுநர் சார்பில் ஆட்சேபனையைத் தெரிவிக்கவுள்ளதாக மன்றில் அறிவித்தார்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர், மனுக்கள் சார்பான ஆட்சேபனையை ஆற்றுப்படுத்துமாறு பிரதிவாதிக்கு மன்று உத்தரவிட்டது.

மேலும், அதற்கு எதிர்ப்பு ஆட்சேபனை இருந்தால் 22ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று மனுதாரருக்கும் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!