வன்முறைகளை தூண்ட சதி!

காலிமுகத்திடலில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றி அடக்குமுறையை கையாள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

போராட்டத்திற்கு நடுவில் அரச ஒற்றர்களை களமிறக்கி வன்முறைகளை தூண்ட சதிகள் முன்னெடுக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்
    
தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது, அரச சேவைகள் வீழ்ச்சி கண்டுள்ளன, வைத்திய கட்டமைப்பு வீழ்ச்சி கண்டுள்ளது, கல்வி முடங்கியுள்ளது, மக்கள் வீதிக்கு வந்துள்ளனர், நாளாந்தம் வரிசைகள் அதிகரிக்கின்றன. இதனால் மரணங்கள் அதிகரிக்கின்றன. ஆகவே நாட்டு மக்கள் வாழவே முடியாத நிலைமை உருவாகியுள்ளது. உணர்வில்லாதாக ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வரையில் தொடர்ச்சியாக போராட வேண்டும். இவர்களை விரட்டியடித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாளை (இன்று) காலிமுகத்திடலில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்.

அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றி அடக்குமுறையை கையாள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போராட்டங்களின் இடையே வன்முறைகளை தோற்றுவிக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஒற்றர்கள் கூட்டங்களில் கலந்து குழப்பங்களை ஏற்படுத்தலாம். எனவே மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வன்முறைகளை கையாள வேண்டாம் என மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரு அணிக்கு எதிராக ஒட்டுமொத்த நாடுமே போராடுகின்றது, இதனை சூழ்ச்சிகளின் மூலமாக தடுக்க முடியாது என அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றோம். எங்கேனும் ஓர் இடத்தில் வன்முறை இடம்பெற்றால் அதற்கு அரசாங்கமே ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!