வரலாற்றில் இடம்பெறப்போகும் தமிழகம்!

நம்மில் பெரும்பாலானவர்கள் கடற்கரைக்குச் சென்றிருப்போம். எப்போது கடற்கரைக்குச் சென்றாலும் கடலுக்கு மிக அருகில் அமர்ந்து ரசிப்பது அனைவரின் வழக்கம். இதற்கு முக்கியக் காரணம், கடலுக்கு மிக அருகில் சென்றால் காற்று மிகவும் வேகமாக வரும். அப்படி வேகமாக வரும் காற்று சில நேரங்களில் நமது கையில் வைத்திருக்கும் பொருட்களை கூட இழுத்துச் சென்றுவிடும்.
    
இப்படி வேகமாக வரும் காற்றைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறினால், பலரும் நம்ப மாட்டார்கள். குறிப்பாக, கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்றால், நம்மில் பலரும் ஒரு விழுக்காடு கூட நம்ப மாட்டார்கள் என்று தெரியும். ஆனால், உலகில் உள்ள பல நாடுகள் இந்த முறையில் மின்சாரத்தை தயாரித்து வருகின்றன.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கார்பன் அளவைக் குறைக்க அனைத்து நாடுகளும் இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன. உலகில் வெளியாகும் கார்பனில் 4-இல் ஒரு பங்கு நிலக்கரி மூலம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகிறது. அனல் மின் நிலையம் மூலம் 29 சதவீதம், போக்குவரத்து மூலம் 23 சதவீதம், தொழிற்சாலைகள் மூலம் 23 சதவீதம், கட்டிடங்கள் மூலம் 10 சதவீதம் கார்பன் வெளியாகிறது.

இவற்றில் அதிக அளவு கார்பன் அனல் மின் நிலையங்களில் இருந்துதான் வெளியாகிறது. இதைக் குறைக்கம், முழுமையாக அனல் மின் நிலையங்களை மூடிவிட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சார தயாரிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய பல நாடுகள் தொடங்கிவிட்டன. சூரிய ஒளி, தரையில் காற்றாலைகள் ஆகியவை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் இருந்து அடுத்தகட்டமாக கடலில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பல நாடுகள் தொடங்கிவிட்டன.

உலக அளவில் கடந்த ஆண்டு 93.6 கிகா வாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 21 கிகா வாட் மின்சார கடலில் நிறுவப்பட்ட காற்றாலைகள் மூலம் கிடைத்துள்ளது. இதன்படி மொத்தம் காற்றாலை மூலம் கிடைத்த மின்சாரத்தில் 72 சதவீதம் தரையில் உள்ள காற்றலைகள் மூலம், 21 சதவீதம் கடலில் உள்ள காற்றலைகள் மூலம் கிடைத்துள்ளது.

இதில் கடல் காற்றாலைகள் மூலம் மின்சார தயாரிப்பத்தில் சீனா முன்னோடியாக உள்ளது. சீனாவில் கடல் காற்றாலைகளில் இருந்து மட்டும 17 கிகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இதைப்போன்று புதிய கடல் காற்றாலைகள் அமைப்பதிலும் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சீனாவில் அதிக அளவு கடல் பகுதியாக உள்ளதுதான்.

இப்போது உங்களுக்கு அதிக அளவு கடல் உள்ள இந்தியா ஏன் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தவில்லை என்ற கேள்வி வரலாம். இந்தக் கேள்விக்கு பதில், இந்தியாவில் விரைவில் கடல் காற்றாலைகள் வரப்போகிறது என்பதுதான். இந்தியா தனது மின்சார தேவைக்கு அதிக அளவு அனல் மின் நிலையங்களை நம்பி உள்ளது. எனவே, மாற்றுத் திட்டத்துக்காக கடல் காற்றாலைகளை நிறுவுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2030ம் ஆண்டுக்குள் 140 கிகா வாட் திறன் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கடல் பரப்பின் எண்ணிக்கை கொண்டு கடல் காற்றாலைகள் மூலம் 174 கிகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள கடல் பரப்பில் காற்றாலைகள் அமைத்து அதிக அளவு மின்சார தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இந்த திட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடல் காற்றாலைகள் மூலம் 4 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க விரைவில் மத்திய அரசு டெண்டர் கோர உள்ளது. இதன்படி 22 – 23ம் ஆண்டில் இருந்து தொடங்கி ஆண்டுக்கு 4 கிகா வாட் மின்சாரம் தயார் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2029-2030 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 5 கிகா வாட் வரை உயர்த்த்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் 4 கிகா வாட் மின்சாரம் தயாரிப்பதற்கான காற்றாலைகளை கடலில் நிறுவதற்கான டெண்டர் கோரடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் தனுஷ்கோடியில் 350 கோடி ரூபாயில் கடல் காற்றாலை ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்திற்கு, 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கடலில் தலா 8 மெகா வாட் திறனில் இரு காற்றாலைகள் நிறுவி பரிசோதிக்க சென்னையில் உள்ள மத்திய காற்றாலை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக குறிப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்தப்பட்டால் ‘கடலோரம் வாங்கிய காற்று, கரன்ட்டாகி போனது இன்று’ என்று பாடி, தமிழகம் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!