சமையல் எண்ணெய் விலையை குறைக்குமாறு உற்பத்தி சங்கங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், சர்வதேச சந்தையில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் உள்நாட்டுச் சந்தையிலும் அதற்கு ஏற்றவாறு, விலைக்குறைப்பு நடவடிக்கையை உறுதிபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
   
இதன் அடிப்படையில் சமையல் எண்ணெயின் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் 15 ரூபாய் உடனடியாக குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விலை குறைப்பு எந்த வகையிலும் நீர்த்துப்போகாமல் இருக்க, உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுக்கு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் பயன் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து, கடந்த மே மாதம் முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்களுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஃபார்ச்சூன் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் பேக்கின் விலை ரூ.220-லிருந்து ரூ. 210 –ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!