மக்கள் வசமானது ஜனாதிபதி மாளிகை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசாங்கத்தையும் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக் காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
    
கோட்டை சத்தம் வீதியில் காவல்துறை தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மதியம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தனர்.

முன்னதாக இன்று காலை போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

எனினும், அடுக்கடுக்கான தடுப்புகளையும், இரும்பு வேலிகளையும் உடைத்துக் கொண்டு அலையலையாக வந்த போராட்டக் காரர்கள், ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயில் கதவு மற்றும் சுவர்களை ஏறிக் கடந்து உள்ளே புகுந்தனர்.

ஆர்ப்பாட்டக்கார்ர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் மற்றும் முப்படையினர் தமது முயற்சியை கைவிட்டுள்ளனர். கொழும்பில் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் நீராடுகின்ற, கட்டில் மற்றும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. எனினும் எவரும் எந்த சேதங்களையும் விளைவிக்காமல், அபகரித்துச் செல்லாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!