சிங்களவர்கள் அரசின் மக்கள்! அரசு சிங்களவர்களுடையது – இலங்கை ஜனநாயகத்தின் இரு முகங்கள் – ஜெரா

ஜனநாயகத்திற்கு ஒரே முகம்தான். மக்களைப் பாதுகாப்பது. மக்களின் அபிலாசைகளுக்கு செவிசாய்ப்பது. மக்களின் பேச்சுரிமையை மதிப்பது. மக்களை சுயாதீனமாக – அச்சமின்றி செயற்பட வைப்பது. குடிமக்கள் நலனில் சிறு கீறலும் விழாது தாங்கிவைத்திருப்பதே ஜனநாயகம்.

மக்கள் நலனையே முன்னிறுத்தி செயற்படும் அதியுயர் ஆட்சிப் பொறிமுறையாக ஜனநாயகம் இருப்பதனாலேயே அது ஒற்றை முகத்தைக் கொண்டிருக்கிறது. சகலருக்கான உரிமைகளையும் ஒரே தராசில் வைத்து வழங்குகின்றது.

ஆனால் இலங்கையில் இந்த ஜனநாயகத்திற்கான வரைவிலக்கணமே வித்தியாசமானதாகும். இரட்டை முகங்களைக் கொண்டதாகும்.

இலங்கைக்குள் பிளவு
இலங்கையானது வெளிப்பார்வைக்கு ஒற்றைத் தீவாக இருப்பினும், அதற்குள் இரு தேசங்கள் புவியியல், பண்பாட்டியல், வரலாற்றியல், பொருளியல் ரீதியாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றன.

தெற்கே சிங்கள தேசம், வடக்கே தமிழ் தேசம் என்பதுதான் அந்தப் பிரிகோடு. இதனை இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படினும் சுட்ட மண்ணும் சுண்ணாம்பும் என்கிற நிலைதான் இற்றைவரை நீடிக்கிறது. எனவேதான் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜனநாயக முறைமையும் இரண்டு முகங்களை எடுத்துக் கொண்டது.

அதாவது சிங்களவர்களுக்கு மென் ஜனநாயகமும், தமிழர்களுக்கு வன் ஜனநாயகமும் ஆகப் பிரிந்தது. இலங்கையில் மக்கள் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஆட்சியைக்கொண்டு நடத்தும் ஜனநாயக மரபானது 1921ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆட்சிமுறை மரபினுள் சம அந்தஸ்து கோரிய தமிழர்கள், அது கிடைக்காத நிலையில், அன்றிலிருந்தே போராடத் தொடங்கினர். ஜனநாயகத்தின் எவ்வித ருசிகரத்தையும் தமிழர்களுக்குச் சிங்களவர்கள் விட்டுத்தரவில்லை.

தன் கருத்தை முன்னிறுத்திப் ஒன்றுகூடிப்போராடும் உரிமை சகலருக்கும் உண்டென்கிறது ஜனநாயகம். ஆனால் 1950 தொடக்கம் தம் மொழி உரிமையைப் பாதுகாக்கவே தமிழர்கள் இரத்தம் சிந்த வேண்டியிருந்தது. தமிழ்மொழியுரிமையை இழக்கக்கூடாதென்று போராடிய தமிழ் ஈகியர்கள் பலர் இலங்கை அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். அதற்கடுத்து கல்வி தரப்படுத்தல் வந்தது.

அதற்கெதிராகவும் தமிழ் இளையோர்கள் போராடினார். இறுதியில் ஆயுதம் ஏந்துவதே ஜனநாயகம் வகுத்த வழியாக மாறுமளவிற்கு மாறுவேசத்தில் உலாவியது இலங்கையின் ஜனநாயகம்.

ஜனநாயகம் மீது தமிழர்கள் அதிருப்தி
இவ்விதமாக இரட்டை முகங்களைக் கொண்ட ஜனநாயகம் மீது தமிழர்கள் அதிருப்திகொண்டு ஆயுதப் போராட்டம் மீது நம்பிக்கைகொண்டனர். அதன் பின்னரான ஜனநாயக ரீதியான அறவழிப்போராட்டங்கள் அனைத்தையும் ஆயுதங்கள் மேய்ந்தன.

தமிழர்களைப் பயங்கரவாதத்திடமிருந்து காப்பதற்காக இலங்கை இராணுவம் மேற்கொண்ட மனிதாபிமானற்ற போரோடு, வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகம் தன் கோரமுகத்தைக் காட்டியது. போர் ஓய்ந்த நிலையில், இனந்தெரியாத நபர்களினால் தமிழர் இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டார்கள். நிராயுதபாணியாக இராணுவத்தினர் முன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே ஒரு தொகுதி மக்கள் உருவாகியிருந்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் எங்கே எனக்கோரி அவர்தம் உறவுகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு ஜனநாயகம் இடமளிக்கிறது என நம்பினர்.

ஜெயக்குமாரியின் போராட்டம்
அவ்வாறு போராடியவர்களில் முதன்மையானவர் ஜெயக்குமாரி அவர்கள். தன் மகனைத் தேடிப் போராடிக்கொண்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பமைச்சராக இருந்த காலப்பகுதியில்தான் அவர் தன் மகனைத் தேடியலைந்துகொண்டிருந்தார்.

அக்காலத்தில் ஒரு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதானார் ஜெயக்குமாரி பின்னர் விடுவிக்கப்பட்டார். விடுக்கப்பட்டதும், பதவியா பகுதியில் திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபடுத்தப்பட்டார். இவ்வாறானதொரு அலைக்கழிப்பும், உயர் அழுத்தமும் அவர் தன் மகனைத் தேடும் போராட்டத்தையே கைவிடச்செய்தது.

இதே காலப்பகுதியில் வலிகாமம் வடக்கில் தம் காணிகளை விடுவிக்கக்கோரி பெரும் போராட்டம் ஒன்றிற்கு அந்நிலத்து மக்கள் அணிதிரண்டிருந்தனர். இராணுவம், புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பின்கீழ் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கவெனக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள் எந்தவொரு ஜனநாயக நாடும் தன் குடிமக்களைத் தண்டிக்கப் பயன்படுத்தியிராதவை.

இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையும் ஜனநாயகத்திடமுண்டு. 2013ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வொன்றை செய்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் மீது பொலிஸார் தம் காட்டுமிராண்டித்தனத்தை அவிழ்த்தார்கள். ஜனநாயகத்தின் அடுத்த விழுமியம் பேச்சுரிமை ஆகும். தமிழர்கள் மிக நீண்டதொரு பேச்சுரிமை ஒடுக்குமுறையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

என்றைக்கு இனவாதக்கோசத்தோடு முதற்கல் தமிழர்கள் மீது வீசப்பட்டதோ, அன்றைக்கே பேச்சுரிமையும் பறிக்கப்பட்டது. உண்மையை உரத்துப் பேசப் புறப்பட்ட ஊடகவியலாளர்கள் பலர் இராணுவ துணைக் குழுக்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். காணாமலாக்கப்பட்டார்கள். ஊடக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கட்டாய செய்தி தணிக்கைகள் திணிக்கப்பட்டன.

இலங்கையில் தமிழர்களின் பேச்சுரிமைக்கு எல்லை
உலகம் பேச்சுரிமைச் சூழலில் எவ்வளவோ விரிவடைந்த பின்னரும் கூட இலங்கையில் தமிழர்களின் பேச்சுரிமைக்கு ஓர் எல்லை வகுக்கப்பட்டிருக்கின்றது.

வடமராட்சிக் கிழக்கிற்கு அழகு சேர்ப்பது மணற்திட்டுக்கள் ஆகும். கடலலைகளின் தாண்டவத்திலிருந்து அப்பகுதி கிராமங்களை காப்பாற்றும் முகமாக இயற்கை அப்படியானதொரு கொடையை வழங்கியிருக்கிறது. 2010, 2011, 2012ஆம் ஆண்டுகளில் அந்த மணற்றிட்டுக்களைக் களவெடுக்கும் குழுவொன்று உருவாகியிருந்தது. மக்களின் எதிர்ப்பையும் மீறி அக்குழு மணல்கொள்ளையில் ஈடுபட்டது.

இதனை எதிர்த்துத் தன் பேஸ்புக்கில் பதிவொன்றை எழுதினார் அப்பகுதி இளைஞர். அன்றையதினம் இரவு அவரது வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைத் தாறுமாறாகச் சுட்டுகொன்றுவிட்டுக் கணனியைத் தூக்கிச்சென்றார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கையில் அதீதஜனநாயக வெளிப்பாட்டுடன் அமைந்த நல்லாட்சி தமிழர் தாயகப்பகுதிகளில் பல போராட்டக் களங்களுக்கு வழிவி்ட்டது.

மாவட்டந்தோறும் தொடங்கிய போராட்டம்
அதில் முதன்மையானது, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாவட்டந்தோறும் தொடங்கிய போராட்டமாகும். “பிள்ளைகளை விடுவி அல்லது ஒரு பிடி சாம்பலைத்தா” எனக்கேட்டு கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இந்தக் காலப்பகுதியில் போராட்டக்களத்திலேயே 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்தும்போய்விட்டனர்.


அரசாங்கங்கள் மாறின. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் மாறினர். யாரும் இவர்களுக்குப் பதில் தரவில்லை. மேற்குறித்த மாதிரித்தான் இலங்கை அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதியில் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகிறது.

சிங்களவர்களுக்கான ஜனநாயகம்
இதுவே தெற்கில் அதாவது சிங்களவர்களுக்கான ஜனநாயகம் முற்றிலும் வேறானதாகக் கடைபிடிக்கப்படுகின்றது. அதற்குரிய மிகப்பிந்திய உதாரணங்களைத் தான் கடந்த 92 நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

சிங்கள மக்கள் தமது ஜனநாயக விழுமியங்களை அணிதிரண்டு போராட்டமாக, பேச்சுரிமையாக, தீவைப்பாக, பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தலாக, பொதுச்சொத்துக்களை ஆக்கிரமித்தலாக – தங்கியிருத்தலாக வெளிப்படுத்த முடியும்.


போராட்டம் என்கிற பெயரில் எதைவேண்டுமானாலும் செய்யலாம். அவர்களைப் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பர். நாட்டின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் கோட்டபாய தலைமையிலான ராஜபக்சவினரே காரணம், எனவே பதவி விலகு எனக்கோரிய போராட்டங்களை கடந்த 90 நாட்கள் மட்டுமே சிங்கள மக்கள் நடத்தினர்.

அரசின் அத்தனை பொதுப் போக்குவரத்துக்களையும் பயன்படுத்தி ஒன்றுகூடினர். பொதுச்சொத்துக்களான ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் ஆகியவற்றை ஆக்கிரமித்தனர். அரசாங்கத்தைப் பணியவைத்தனர். இடையே கடந்த மே 9இல் பெருமளவிலான அரச – தனியார் சொத்துக்களைத் எரித்தழித்தனர். அரசு குற்றவாளிகளைத் தண்டிக்கவுமில்லை. முறைப்படி விசாரிக்கவுமில்லை.

ஜனநாயகத்தின் கோரமுகம்
இது மாதிரியானதொரு போராட்டத்தை வடக்கு, கிழக்கு மக்கள் முன்னெடுத்திருப்பின், இந்த ஜனநாயகத்தின் கோரமுகம் வேறுமாதிரி இருந்திருக்கும். இவ்வேளைக்குப் போராட்டங்களை ஒழுங்குபடுத்திய பலர் புலிகளை மீளுருவாக்கம் செய்தனர் என்கிற குற்றச்சாட்டின் கீழ் கைதாகியிருப்பர்

நடந்தேறியிருக்கும் துப்பாக்கிச் சூடுகளில் பல சுலக்சன்கள் வீழ்ந்து கிடந்திருப்பர். ஆனால் தெற்கில் அரசையே அசைத்த இவ்வளவு பெரிய போராட்டத்தின் பின்பும் இவையெதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். ஏனெனில் சிங்களவர்கள் அரசின் மக்கள். அரசு சிங்களவர்களுடையது. அவர்களுக்கான ஜனநாயகம் மென்போக்கானது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!