இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

அரசியலமைப்பிற்கமைய இடைக்காலத் ஜனாதிபதி ஒருவரை விரைவில் நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் இடைக்கால ஜனாதிபதியை நியமித்து, நாட்டின் அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் பின்னர் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதமரை உடனடியாக நியமிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு ஜனாதிபதி பதவி விலகினால், அவரது கையொப்பத்துடன் இராஜினாமா கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்மைய, ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது, ​​பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

பிரதமரால் முடியாவிட்டால், சபாநாயகர் அரசியலமைப்பு ரீதியாக ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவார். அதன்பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தகுதியுள்ள ஒருவர் இடைக்கால ஜனாதிபதியை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, நாட்டை விரைவாக ஸ்திரப்படுத்துவது அவசியமானதாகும், எனவே அதற்காக நேரத்தை செலவிடுவதால் நிலைமை மேலும் கடினமாகிவிடும்.

இந்த நிலைமையை கட்சித் தலைவர்களும் இந்த நாட்டின் அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!