குறுகிய ஒற்றையாட்சி மனோநிலை அழிவுகளுக்கே வழிவகுக்கும்

சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்கு (SC Spl 03/2014 -Decided on 04/08/2017) தொடர்பாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிறிலங்கா உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது இடம்பெறும் புதிய அரசியலமைப்பு மீதான விவாதமானது, அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை போல் தெரிகிறது.

இந்த நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் பல பத்தாண்டுகளாக ஒற்றையாட்சி மேலாதிக்கம் மூலம் செல்வாக்குச் செலுத்தப்படுகின்ற போதிலும் இந்த ஆட்சியானது சமத்துவத்தைக் கடைப்பிடிக்கவில்லை. கூட்டாட்சி என்பது பிரிவினைவாதத்திற்கு ஒப்பானதல்ல என்கின்ற பிரகடனமானது இது தொடர்பான நீதித்துறையின் விளக்கத்தில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து நிற்கிறது.

நான் இப்பத்தியில் சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்புத் தொடர்பாகவும் அதன் கல்விசார், சட்ட மற்றும் அரசியல் உட்பொருட்கள் தொடர்பாகவும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது, ஒற்றையாட்சி மட்டுமே எமக்கான தீர்வு என்பதை எவ்வாறு எமது அரசியலமைப்புச் சட்டப் பாடத்திட்டத்தில் உருவகிக்கப்பட்டிருந்ததை நான் அறிந்து கொண்டேன். எமது நாட்டிற்கு ஒற்றையாட்சி மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்பது இப்பாடநெறியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாங்கள் கூட்டாட்சி தொடர்பாக கற்றபோதிலும், இது ஒற்றையாட்சி போன்று சட்ட ரீதியாக பொருத்தப்பாடானதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உருவகிக்கப்படவில்லை. ஒற்றையாட்சி மேலாதிக்க மனோநிலையானது கூட்டாட்சிக்கான எண்ணக்கருவை முற்றாக அழித்தொழித்தது.

அதாவது கூட்டாட்சி என்பது தனிநாடு அல்லது பிரிவினைவாத ஆட்சி என்கின்ற தவறான மொழிபெயர்ப்பை வழங்கியது. ஒற்றையாட்சி எதிர் கூட்டாட்சி விவாதமானது எப்போதும் தேசப்பற்றாளர்கள் மற்றும் தேசத்துரோகிகளுக்கு இடையிலான விவாதமாகவே நோக்கப்படுகிறது.

சிங்களப் பெரும்பான்மையைப் பொறுத்தளவில், கூட்டாட்சி, சுயநிர்ணயம், தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் போன்றன மிகச்சாதரணமாக ஈழம் போன்ற கருத்துக்களுக்கு ஒப்பாகவே நோக்கப்படுகிறது. ஒரு சில சிங்களப் புலமைவாதிகள் மாத்திரமே கூட்டாட்சி என்பது ஒரு மாற்றுவழி ஆட்சிக் கட்டமைப்பு என்பதையும் இது சட்டரீதியானது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இரு தரப்பைச் சேர்ந்த தீவிர இனவாதிகள் கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி என்ற சொற் பதங்களைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். இதுவே அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியற் கட்சிகள் எதிரிகளாகப் பார்க்கப்படுவதற்கான காரணமாகும்.

அரசியலமைப்பின் புறக்கணிப்புக்களைத் தெளிவுபடுத்துவதற்காக உச்சநீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அதில் அங்கம் வகிப்பவர்கள் சிறிலங்காவில் தனி நாட்டை அமைப்பதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளதாக இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இங்கு சுருக்கமாகத் தரப்படுகிறது:

கூட்டாட்சி என்பது பிரிவினைவாதம் அல்ல. இது சட்டத்திற்கு மாறானதல்ல.
தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணயத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையானது சட்டரீதியானது மட்டுமன்றி இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உரிமையாகும்.
அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் தமக்கே உரித்தான சட்ட உரிமையுடன் கூட்டாட்சி தொடர்பான கோரிக்கையை முன்வைக்கின்றன.
அதிகாரப் பரவலாக்கல் என்கின்ற வார்த்தைப் பிரயோகம் தொடர்பாக பல்வேறு வரையறைகளை முன்வைப்பதால் ஒற்றையாட்சி அல்லது கூட்டாட்சி என நாடுகளுக்கு முத்திரை குத்துவதால் தவறான வழிநடத்தல் ஏற்படலாம்.
1987ல் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தம் பிரச்சினையைத் தீர்க்கும் 13வது திருத்தச் சட்டத்தின் பின்னரான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பாக இது காணப்பட்டது. மாகாண சபைகள் இந்த நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை நீர்த்துப் போகச் செய்யவில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பானது அதிகாரப் பகிர்வு தொடர்பாக எதனை அனுமதித்துள்ளது என்பது தொடர்பாக மிகக் குறுகிய உறுதியான விளக்கம் வழங்கப்பட்டது.

கூட்டாட்சியானது பிரிவினைவாதம் அல்ல என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது ஒற்றையாட்சி நாட்டிற்குள் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆட்சி முறைமையாக இது அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் கூட்டாட்சி என்பது பிரிவினைக்கு வழிவகுக்கும் என தவறாக விதந்துரைக்கப்பட்டுள்ளது. 1972 வட்டுக்கோட்டை மாநாடு மற்றும் திம்புப் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் இவையே தீர்ப்பாக உள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையுடன் தமக்கான தனிநாட்டைக் கோருவதாக சிங்கள சமூகத்தின் மத்தியில் தவறாக கற்பிதம் செய்யப்பட்டது. இதனால் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது ஒற்றையாட்சிக்குள் கூட்டாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்ட கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட ஆறாவது திருத்தச் சட்டத்தில் ஒற்றையாட்சியே சிங்கள சமூகத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தனிநாட்டிற்கு எதிராக அரசும் அரச அதிகாரிகளும் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதனால் அரசில் அங்கம் வகிப்பவர்கள் எவரும் கூட்டாட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்கின்ற நிலை காணப்படுகிறது. உண்மையில் இது அதிகாரத்துவம் மிக்கதாகவும் ஜனநாயகம் மற்றும் சட்டத்திற்கு மாறானதாகவும் காணப்படுகிறது.

தமிழ் அரசியல்வாதிகள் உறுதிமொழிக்கு மாறாக கூட்டாட்சிக்கு ஆதரவளிப்பதால் அவர்கள் பிரிவினைவாதத்தைக் கோருவதாக நோக்கப்படுகிறது. கூட்டாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக தமிழ் அரசியல்வாதிகள் பரப்புரை செய்வதானது பிரிவினைவாதமாக நோக்கப்படுகிறது.

இரண்டு பக்கமும் ஒற்றையாட்சி என்கின்ற பெயரைக் கொண்ட நாணயமாக இருப்பதற்கு அரசியலமைப்பு மீதான விவாதம் தேவையற்ற ஒன்று எனக் கூறப்படுகிறது.

அதாவது இரு பக்கமும் ஒற்றையாட்சியைக் கொண்ட ஒரு விவாதத்தில் கலந்து கொள்வதற்கு தீவிரவாத அரசியற் கட்சிகள் தயாராக இல்லை. ஒற்றையாட்சி மட்டுமே சட்ட ரீதியானது. கூட்டாட்சியானது மிகவும் மோசமானது எனக் கருதும் அரசியற் கட்சிகள் இந்த விவாதத்திற்கு மறுப்புத் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஆளப்படும் சமூகமானது சட்டம், தார்மீகம், அரசியல் மற்றும் அரசியலமைப்பில் கூட்டாட்சி தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைத் தன்மை தொடர்பாகவும் ஒற்றையாட்சிக்குப் பதிலாக கூட்டாட்சியைத் தெரிவு செய்ய முடியும் என்பது தொடர்பாகவும் விளக்கமற்றுக் காணப்படுவது நகைப்பிற்குரியதாகும்.

எமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முதலாக தற்போது கூட்டாட்சி தொடர்பாகவும் இதன் மூலம் அதிகாரப் பகிர்வானது நேரடியாக இடம்பெறும் என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படுவது மிகக் கொடுமையானதாகும்.

சிங்கள சமூகமானது அறிவார்ந்த சமூகமாக உள்ளதா அல்லது உணர்ச்சி மிகுந்த சமூகமாக உள்ளதா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

உச்ச நீதிமன்றின் தீர்ப்பானது தேசிய அரசியல் -வரலாற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதற்கான தார்மீக, அரசியல் மற்றும் அரசியலமைப்புச் செயற்பாட்டை நோக்காகக் கொண்ட சட்டத் தீர்வாகவும் நோக்க முடியும்.

இதேவேளையில் எமது நாட்டில் முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற கற்பனை செய்ய முடியாத உயிர்ச்சேதங்கள் மற்றும் அழிவுகள் போன்றவற்றை நாம் நேரில் கண்ட பின்னரும் ஒற்றையாட்சி என்பது தொடர்பாக குறுகிய மனநிலையுடனும் அதிகாரத்துவ மனநிலையுடனும் தொடர்ந்தும் இருந்தால் இந்த அழிவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆங்கிலத்தில் – சஞ்ஜீவ பெர்னான்டோ
வழிமூலம் – Daily mirror
மொழியாக்கம் – நித்தியபாரதி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,