பாரிய அளவு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் சாத்தியம் – மத்திய வங்கி ஆளுநர்

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 6  வீதத்திற்கும் அதிகமாக குறைவடையக் கூடுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் ஸ்தீர்மற்ற தன்மையினால் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் உதவி தொடர்பான  பேச்சுவார்த்தை பாதிப்படைந்துள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பில்லியன் டொலர் கடன் உதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும், ஏனைய நாடுகள் மற்றும் பலதரப்பு முகவர்களிடமிருந்தும் குறுகிய கால நிதியுதவியினைப் பெறுவதற்கும், எரிபொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் உரங்கள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்துவதற்கு உதவுவதற்கும் நாட்டில் நிலையானதொரு அரசியல் நிர்வாகம் அவசரமாக தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய ரிசர்வ் வங்கியுடனான 1 பில்லியன் டொலர் கடன் உதவி கோரிக்கையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும்  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!