கோட்டாவைக் கைது செய்யக் கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் முறையீடு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்காக கைதுசெய்யவேண்டும் என கோரும் குற்றவியல் முறைப்பாடொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தாக்கல் செய்துள்ளது
    
2009 இல் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் சர்வதேச அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச தெரிவித்துள்ளது.

இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் சிங்கப்பூரில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரிற்கு தப்பியோடியுள்ள நிலையில் அங்கு அவரை விசாரணைக்கு உட்படுத்தமுடியும் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து 13ம் திகதி தப்பியோடி மாலைதீவு சென்ற கோத்தபாய ராஜபக்ச பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் தனது இராஜினாமாவை அறிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி பிரதமரின் இல்லத்திற்குள் நுழைந்து அவற்றை கைப்பற்றியிருந்தனர்.

இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த ஆராயக்கூடிய தகவல்கள் மற்றும் சிங்கப்பூரில் தற்போதுள்ள தனிநபரை தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவியல் முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளோம் முறைப்பாட்டை தயாரித்த சட்டத்தரணிகளில் ஒருவரான அலெக்ஸான்டிரா லில்லி கதர் ஜேர்மனிலிருந்து தொலைபேசி மூலம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் சிங்கப்பூருக்கு அதன் கொள்கைகள் அதன் சட்டங்களிற்கு உட்பட்ட வகையில் அதிகாரத்தின் முன்மையை பேசுவதற்கான தனித்துவமான வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் ஊடாக கோத்தபாய ராஜபக்சவின் கருத்தினை பெற முயன்ற முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை முன்னர் அவர் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு தான் காரணம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்திருந்தார்.

23ம் திகதி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடமிருந்து கடிதமொன்று கிடைத்துள்ளதை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் நிராகரித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச தனிப்பட்ட விமானத்தில் சிங்கப்பூர் வந்துள்ளார் அவர் புகலிடம் கோரவில்லை என அதனை வழங்கவுமில்லை என சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கற்பித்துள்ள பிரிட்டனின் போர்ட்மவுத் பல்கலைகழக சட்டபேராசிரியர் சுபாங்கர் டாம் சிங்கப்பூரின் நீதிமன்றங்கள் யுத்த குற்றங்கள் இனப்படுகொலைகள் சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை செய்ய முடியும் என்ற போதிலும் இறுதிவழிமுறையாகவே அவற்றை மேற்கொள்ளவேண்டும் என தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நடுநிலைமை என்பது சிங்கப்பூரின் வெளிவிவகார கொள்கையில் அதிகாரபூர்வமாக குறிப்பிடப்படாத போதிலும் அது நீண்டகாலமாக சமமான தன்மையை பேணிவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றின் முன்னாள் தலைவர் ஒருவரை விசாரiணைக்கு உட்படுத்தும் எந்த நடவடிக்கையும் அதன் வெளிவிவகார கொள்கை நோக்கங்களிற்கு சமமாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!