அமெரிக்காவில் பெண்ணை சுட்டுகொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னாள் கணவன்!

அமெரிக்காவில் விவாகரத்து பற்றி டிக்டாக் காணொளி வெளியிட்ட பெண்ணை முன்னாள் கணவர் சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பாகிஸ்தானை சேர்ந்த பெண் சானியா கான் (வயது 29). அமெரிக்காவில் புகைப்பட கலைஞராக இருந்து வந்துள்ளார்.

2021ம் ஆண்டு ஜூனில் சிகாகோ நகருக்கு அவர் குடிபெயர்ந்து உள்ளார். இவரது முன்னாள் கணவர் 36 வயதான ரஹீல் அகமது. அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் ஆல்பாரெட்டா நகரில் வசித்து வந்த அகமது, சிகாகோவில் உள்ள சானியாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

   
இந்த நிலையில், சானியா மற்றும் அகமது இருவரும் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு சானியாவில் வீட்டில் கிடப்பது பற்றிய தகவல் அறிந்து சிகாகோ பொலிஸார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதில், சானியா சம்பவ பகுதியிலேயே உயிரிழந்து விட்டார் என்றும் அகமது மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிகிறது.

இருப்பினும், வைத்தியசாலையில் அகமது உயிரிழந்து விட்டார். சானியா தனது டிக்டாக் காணொளியில், திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே, விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பது பற்றி விவரம் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனது திருமணத்திற்கு பின்னான போராட்டங்கள் பற்றி பேசியுள்ளார். விவாகரத்து பெற்று ஒரு புது வாழ்வை தொடங்குவது பற்றியும் அதில் அவர் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அகமது, நேராக சானியாவின் வீட்டுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு அவரை கொன்று விட்டு, தற்கொலையும் செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப வன்முறைக்கு எதிரான தேசிய கூட்டணி அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியின்படி,
அமெரிக்காவில், கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு, ஆண்டொன்றுக்கு வயதுக்கு வந்த 1 கோடி பேர் குடும்ப வன்முறையில் சிக்கிய அனுபவங்களை கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இதனை உலக சுகாதார அமைப்பு (WHO) மேற்கொண்ட ஆய்வும் உறுதி செய்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!