மகன் மீண்டும் உயிர் பெற்று வருவான்: – உடலை வைத்து பிரார்த்தனை செய்த பாதிரியார்

மும்பையில் உள்ள நாக்பாடா நகரில் ‘ஜீசஸ் பார் ஆல் நேசன்ஸ் மினிஸ்ட்ரி’ என்ற பெயரில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்றை ஆக்டவியோ நேவிஸ் என்பவர் நடத்தி வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற பயங்கரமான நோய்களிலிருந்து மக்களை பிரார்த்தனைகள் மூலம் காப்பாற்ற முடியும் எனவும் கூறி வருகிறார். அதனை பலரும் நம்புகின்றனர்.

நேவிசிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரின் 17 வயது மகனான மேஷாக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் கடந்த மாதம் 26 ம் தேதி அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அவன் உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிறுவனின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யாமல் அவன் மீண்டும் உயிரோடு வருவான் என கூறி பிராத்தனை செய்து வந்துள்ளனர். நாக்பாடா காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள தேவாலயத்தில், அவன் உடலை ஐஸ் பெட்டிக்குள் பதப்படுத்தி வைத்தனர். பின்னர் 250 பேருக்கும் அதிகமான மக்கள், அவன் உடல் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். 11 நாட்களாக பிரார்த்தனை செய்து வந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் தேவாலயத்திற்குள் நுழைத்து சிறுவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யுமாறு பெற்றோரிடம் கூறினர். இல்லையெனில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் இறுதிச் சடங்குகள் செய்வதாக போலீசாரிடம் கூறினர். அதன்படி இன்று இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறந்து போன உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யாமல் மூட நம்பிக்கையோடு மீண்டும் உயிரோடு வருவான் என எண்ணி பிரார்த்தனை செய்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.