புதிய பிரதமர் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்துள்ளார்

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பிரதமருக்கான கடமைகளை ஆரம்பித்துள்ளார். கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் அவர் இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை அடுத்து பிரதமராக தினேஷ் குணவர்தன கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்தார்.

இலங்கையின் 26 வது பிரதமர்
தினேஷ் குணவர்தன, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 26 வது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்கு பின்னர், இலங்கையில் சில அரசியல்வாதிகள் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளனர். இதனடிப்படையில் தினேஷ் குணவர்தன 26 வது பிரதமர் என அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய குறிப்பிடப்படுகிறார்.
5 முறை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க


எனினும் தினேஷ் குணவர்தனவுடன் சேர்த்து இலங்கையில் 16 பேரே பிரதமராக பதவி வகித்துள்ளனர். இவர்களில் ரணில் விக்ரமசிங்க 5 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, விஜயானந்த தஹாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிறி விக்ரமநாயக்க, டி.எம். ஜயரத்ன ஆகியோர் ஒரு முறை மாத்திரம் பிரதமராக பதவி வகித்துள்ளனர்.

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவின் புதல்வரான டட்லி சேனாநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மகிந்த ராஜபக்ச ஆகியோர் மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளனர்.   

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!