முதலாம் திகதியின் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது – அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சரவைக்கு உறுதிமொழி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அவர், எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

டிசம்பர் இறுதிக்குள், சமையல் எரிவாயு வரிசைகள் அகற்றப்படும். இதனால், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மக்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ லங்கா தெரிவித்துள்ளது.

எரிபொருள் தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் இன்னல்களுக்கு மத்தியில், அன்றாட சமையல் நடவடிக்கைகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை நடத்துவதற்கும், தேவையான எரிவாயுவை வழங்குவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தின் பெரும் செலவீனமாக இருப்பதன் காரணமாக எரிபொருள் தீவிர பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ம் ஆண்டில் எரிபொருள் கொள்வனவுகளுக்கு 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

இலங்கை போன்ற சிறிய பொருளாதாரம் கொண்டுள்ள நாட்டிற்கு இவ்வாறான அதிகரிப்பை தாங்கிக் கொள்வது கடினம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!