உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்ற முடியாது! – இரா.சம்பந்தன்

உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை-, சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.

தொழில்நுட்பம், பொருளாதாரம், சேவை போன்ற துறைகளில் சிங்கப்பூர் கொண்டிருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றிச் செல்லும் வகையில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் இலங்கை பாரிய பின்னடைவில் உள்ளது. ஏன் இலங்கையில் அபிவிருத்திகள் இடம்பெறவில்லையென்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் நாம் சிங்கப்பூருடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்யவில்லை. 1960களின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் தலா வருமானம் 500 அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்பொழுது 55,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. நூறு மடங்கு அதிகரிப்பாகும்.

சிங்கப்பூரின் வெற்றிக்கு அந்நாடு கடைப்பிடிக்கும் ஐந்து கொள்கைகளே அடிப்படையாகும். அந்நாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் அரசியல் ரீதியானவை அல்ல. இனங்களுக்கிடையில் ஒற்றுமை காணப்படுகிறது, சுத்தமான அரசாங்கம், அதாவது மோசடிக்கு இடமற்ற ஆட்சி, சட்டத்தின் ஆட்சி கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது, சமத்துவம் போன்ற ஐந்து கொள்கைகளுமே அந்நாட்டின் வெற்றிக்குக் காரணமாகும்.

இலங்கையில் அவ்வாறு கொள்கைகள் எதுவும் கடைப்பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் சிங்கப்பூரில் துறைமுகம் இருக்கவில்லை. கொழும்பு துறைமுகம் அரசியல் தலைமைத்துவத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டங்களால் முடங்கியிருந்தது. இதனைப் பயன்படுத்தி சர்வதேச கப்பல்களை ஈர்க்கும் நோக்கிலேயே லீகுவான் சிங்கப்பூரில் துறைமுகத்தை அமைத்தார்.

எனவே இலங்கையும் இதுபோன்ற முன்னுதாரணமான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டாலே தேவையான பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.

இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற தேவை சிங்கப்பூருக்குக் கிடையாது. எமக்கே சிங்கப்பூருடன் ஒப்பந்தம் செய்யவேண்டிய தேவை உள்ளது. இதன் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய சிங்கப்பூரின் கொள்கைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைத்துறையை இலங்கை பயன்படுத்தி அபிவிருத்தியை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவுடன் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளின் ஊடாக இவற்றைப் பார்ப்பதாலேயே எதிர்ப்புக்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி நோக்குவதன் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!