லண்டனை கலக்கிவரும் இந்தியர்!

லண்டனில் வசிக்கும் இந்தியர் ஒருவர் சொந்தமாக தனது வீட்டிலேயே நான்கு இருக்கைகளைக் கொண்ட விமானத்தை உருவாக்கி, அதில் குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து வருகிறார். கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் அசோக் அலிசெரில் தாமரக்ஷன். அவர் தனது முதுகலை பட்டப்படிப்பைத் தொடர 2006-ல் பிரித்தானியாவிற்கு சென்றார், அங்கு அவர் தற்போது ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
    
லண்டனில் வசித்துவரும் அசோக் அலிசெரில் தாமரக்ஷன், கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது குடும்பத்துடன் பயணிக்க சிறிய விமானத்தை தனது வீட்டியிலேயே உருவாக்கினார். அதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் எடுத்துக்கொண்டார்.

நான்கு இருக்கைகள் கொண்ட விமான மாடலான “Sling TSI”க்கு “G-Diya” என்று பெயரிடப்பட்டுள்ளார். தியா என்பது அவரது இளைய மகளின் பெயர் என்று கூறப்படுகிறது.

விமானி உரிமம் பெற்றவரான அசோக் அலிசெரில், இதுவரை ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு நான்கு இருக்கைகளில் தனது குடும்பத்துடன் பயணித்துள்ளார்.
ஒரு விமானத்தை உருவாக்கும் யோசனை எவ்வாறு வந்தது என்பதைப் பற்றி கூறிய அசோக், “ஆரம்பத்தில், 2018-ல் எனது பைலட் உரிமத்தைப் பெற்ற பிறகு பயணங்களுக்கு இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தை வாடகைக்கு எடுத்தேன். ஆனால் எனது குடும்பத்தில் எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர், எனக்கு நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் தேவைப்பட்டது. ஆனால் அவை அரிதானவை, நான் ஒரு விமானத்தி வாங்க நினைத்தாலும், அவை மிகவும் பழமையானதாக இருந்தன” என்றார்.

சரியான நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தைக் கண்டுபிடிப்பதில் உள்ள இந்தச் சிரமம், ஊரடங்கின் போது அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தைப் பற்றி அறிந்துகொள்ளச் செய்தது.

38 வயதான அவர் தனது சொந்த விமானத்தை உருவாக்க, ஜோகன்னஸ்பர்க்கை தளமாகக் கொண்ட ஸ்லிங் ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு 2018-ஆம் ஆண்டு ஸ்லிங் டிஎஸ்ஐ என்ற புதிய விமானத்தை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த அவர், தொழிற்சாலைக்குச் சென்று அவரது சொந்த விமானத்தை உருவாக்காத தேவையான kit-ஐ அங்கிருந்து ஆர்டர் செய்தார்.

கோவிட் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் நிறைய நேரம் கைவசம் இருந்ததால், இந்த காலகட்டத்தில் சேமிக்கப்பட்ட பணம் அவருக்கு லட்சிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியது. இந்த விமானத்தை உருவாக்க மொத்தம் இந்திய ரூபாய் 1.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அசோக் அலிசெரில் தாமரக்ஷன், கேரளாவின் முன்னாள் எம்எல்ஏ ஏவி தாமரக்ஷனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!