காலிமுகத்திடலில் இருப்பவர்கள் போராட்டகாரர்கள் அல்ல அராஜககாரர்கள்:விமல் வீரவங்ச

எனக்கு ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சு பதவி தேவையில்லை, எனக்கு எனது நாடு அவசியம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காலிமுகத்திடலில் இருப்பது போராட்டகாரர்கள் அல்ல அராஜககாரர்கள். இதில் இருப்பது நாட்டை வீழ்த்தும் சூழ்ச்சித்திடடம். அதற்கு இடமளிக்க முடியாது. லட்சக்கணக்கான மக்களின் நியாயமான ஆத்திரத்தை விமர்சிக்கவில்லை.

நாட்டை வீழ்த்தும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது
எனினும் நாட்டை வீழ்த்துவதற்காக பொது மக்களின் கஷ்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எப்படியான பேதங்கள் இருந்தாலும் தீர்மானகரமான சந்தர்ப்பத்தில் நாட்டை வீழ்த்த முயற்சிக்கும் சதித்திட்டத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.

ஆட்சிக்கு வரும் அனைவரையும் வீட்டுக்கு செல்லுமாறு கூற எவருக்கும் உரிமையில்லை. கோட்டா கோ ஹோம் என்று கூறியதும் சென்றார்.

அத்துடன் இது முடிந்து விடும் என நினைத்தோம். ஆனால், அப்படியல்ல இன்னும் அது முடியவில்லை. இங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா, அடுத்த 9 ஆம் திகதி மற்றுமொருவரை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் நடக்கும் என்கிறார். அவரை அனுப்பியதும் தினேஷ் ஜனாதிபதியாக பதவிக்கு வர நேரிடுமாம்.

இது என்ன பைத்தியகாரத்தனம். கோட்டா கோ ஹோம், பிறகு ரணில் கோ ஹோம் அதன் பின்னர் தினேஷ் கோ ஹோம் என்று கூறுவார்கள்.

யாரை ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டும் என்று கூறினால், அது இதனை விட இலகுவாக இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் இணைந்து அந்த நபரை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம்.

சர்வதேச ஊடகங்களுக்கு தினமும் செய்திகளை வழங்கி, இலங்கையை லிபியா, ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு போல் காண்பிப்பதா போராட்டம்?. இந்த போராட்டத்திற்கா புனிதத்தை கொடுக்க போகின்றீர்கள்?.

இராணுவத்தின் அமைதியான முதிர்ச்சியை கோழைத்தனம் என நினைக்க வேண்டாம்
போராட்டகாரர்கள், இராணுவத்தினரை பார்த்து உங்களை விட பிரபாகரன் சிறந்தவர் எனக் கூறுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவர், இராணுவத்தினரின் வீடுகளை தீவைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அப்போது என்ன நடக்கும் வீடுகளில் இருந்து இராணுவத்தினரின் மனைவிமார், தமது கணவர்களிடம் நீங்கள் இதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என கூறுவார்கள், அது இராணுவத்தினருக்கு உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை. நாட்டை வீழ்ச்சியடைய செய்யும் சூழ்ச்சி. 
இலங்கை இராணுவத்தின் அமைதியான முதிர்ச்சியை கோழைத்தனம் என நினைக்க வேண்டாம்

தற்போதாவது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இடமளியுங்கள். அரச சொத்துக்களை கைப்பற்றுவது அமைதியான நடவடிக்கையா எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!