60 லட்சம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்களை விளைச்சல் செய்வதற்கு உதவும் பூச்சி இனங்கள்!

பூச்சிகள், ஈக்கள், வண்டுகள் போன்றவை சில நேரங்களில் மனித சமூகத்துக்கு பெரிய தொல்லைகளாக தெரியலாம். ஆனால், அவையும் இந்த உலகத்தை வாழ வைக்கும் முக்கிய வரங்களில் ஒன்றாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. ஏனெனில், தாவர இனப்பெருக்கத்துக்கும், உணவு தானிய உற்பத்திக்கும் இவை, ‘மகரந்த சேர்க்கை’ என்ற வகையில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த மகரந்த சேர்க்கைக்கு உலகம் முழுவதும் 2 லட்சம் வகையான உயிரினங்கள் உதவுகின்றன என்கிறது ஒரு ஆய்வு. உலகளவில் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்களை விளைச்சல் செய்வதற்கு தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள் மற்றும் இதர பூச்சி இனங்கள் நேரடியாக உதவுகின்றன என்று ஐநா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

அப்படிப்பட்ட பூச்சி இனத்துக்கு ‘நியோநிகோடினாய்டு’ என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் மூலம் பெரிய ஆபத்து வந்துள்ளது. களைகளை அழிக்கவும், பூச்சிகள், நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், வண்டுகள், பூச்சி வகைகள் ஏற்கனவே அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இந்த பூச்சி இனங்கள், வண்டுகள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேநிலை நீடித்ததால், எதிர்காலத்தில் இயற்கையாக நடைபெறும் மகரந்த சேர்க்கை ஒழிந்து, உணவு தானிய உற்பத்திக்கே பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

‘நியோநிகோடினாய்டு’ பூச்சிக்கொல்லி மருந்தின் ஆபத்தை உணர்ந்துதான் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதனை பயன்படுத்த தடை விதித்துள்ளன. ஆனால், பிரிட்டன் இதை சில கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தி வருகிறது. இப்போது அதுவும் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த மருந்துக்கு தனது நாட்டிலும் தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இந்தியா இயற்கையாகவே விவசாய நாடு. இங்கு சில பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர, பூச்சி இனத்துக்கு இன்னும் பெரியளவில் ஆபத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, பூச்சிகள், வண்டினங்களை அழித்தால் எதிர்காலத்தில் மக்கள் ‘புவ்வா’வுக்கு லாட்டரி அடிக்கும் நிலைமை உருவாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , , ,