ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறைகிணறு கண்டுபிடிப்பு: – பிரமித்த கங்கைகொண்ட சோழபுரம் மக்கள்

கங்கைகொண்டசோழபுரத்தில், 5 அடி அளவுக்கு திடீரெனப் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதைக் காண ஏராளமான மக்கள் திரண்டு வருகிறார்கள்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், சோழர் காலத்தில் பயன்படுத்திய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், கோயிலிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது விவசாய நிலத்தில், நேற்று முன்தினம் சிலர் ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, நிலத்தில் நீர்க்குமிழிகள் வெளியேவந்தன. சிறிது நேரத்தில் அந்த இடம் உள்வாங்கியது. அந்தக் குழி, சுமார் ஒரு மீட்டர் அகலமும் 15 அடி ஆழமும் இருந்தது.தகவலறிந்த தொல்லியல்துறை அகழ்வைப்பக காப்பாட்சியர் பிரபாகரன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் பொறியாளர் கோமகன் மற்றும் ஆத்தூர் வரலாற்றுத்துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள், “இந்தக் கிணறு, சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய உறை கிணறு. இந்தக் கிணற்றில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகள் உள்ளன. உறைகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரமும், சுமார் 2 செ.மீ அகலமும் உள்ளது. இந்தக் கிணற்றின் அருகில், அதிக அளவில் சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகளும் சீனநாட்டைச் சேர்ந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதை ஆய்வுசெய்ய இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து காப்பாட்சியர் பிரபாகரன் கூறுகையில், “இதுபோன்ற சுடுமண் உறை கிணறுகள், சங்க காலம் முதல் கி.பி 16-ம் நூற்றாண்டு வரை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதை பரிசோதனைக்காக தொல்லியல்துறை தலைமைக்கு அனுப்ப உள்ளோம். மேலும் இதுகுறித்து ஆய்வுசெய்ய அனுமதி அளித்தால், ஆய்வு நடத்து முடியும்” எனக் கூறினார். இந்தக் கிணற்றை பொதுமக்கள் பலரும் பார்த்து வியந்து வருகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், “இது 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உறைகிணறு. வசதியானவர்கள் தங்களுடைய பயன்பாட்டிற்காக இதுபோன்று பயன்படுத்துவார்கள். அல்லது சுரங்கப்பாதை அமைத்து, மன்னர்கள் அதில் பயணிக்கும்போது, வெளிச்சம் மற்றும் காற்றுக்காக உருவாக்கப்பட்டதாகக்கூட இருக்கலாம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட உறை கிணறுகளைத் தொல்லியதுறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எதையும் தொல்லியல் துறையினர் வெளியில் சொல்வதில்லை. இதை ஆய்வு செய்ததுமில்லை. சோழ வம்சத்தின் முக்கியமான மன்னர் ராஜேந்திர சோழன். அவர் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ஊர், ஜெயங்கொண்டம். மதுரை கீழடியைவிட, இப்பகுதியில் அரிய பொக்கிஷங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதிகாரிகள் ஆய்வுசெய்யாமல் ஏன் அலட்சியம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழர்களின் தொண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்” என்று முடித்தார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,