இலங்கையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இங்கிலாந்து அறிவிப்பு

இலங்கையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தமை உட்பட வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத் தரப்புகளையும், ஊக்குவிப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் ஆதரவு..

சட்டத்தின் ஆட்சியை மதிக்கவும், வன்முறை மற்றும் சேதங்களைத் தவிர்க்கவும் அனைத்து தரப்பினரையும் கோருவதாகவும் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அமண்டா மில்லிங் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், உலக வங்கி (WB), மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற பலதரப்பு நிறுவனங்கள் மூலம் இங்கிலாந்து பொருளாதார ஆதரவை வழங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தில் ஐக்கிய இராச்சிய கூட்டு, ஐந்தாவது பெரிய பங்குகளைக் கொண்டுள்ளது, அத்துடன் ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வங்கிக்கும் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் நிறுவனங்களில் இங்கிலாந்து குறிப்பிடத்தக்க குரலைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் சக பரிஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் உலக வங்கி உட்பட பலதரப்பு அமைப்புகளுடன் இங்கிலாந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அமண்டா மில்லிங் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!