சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க நிபந்தனை விதித்துள்ள டலஸ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நிபந்தனைகளை விதித்துள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வாரம், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க இணையுமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 
தேசிய மக்கள் சக்தி அவரது அழைப்பை நிராகரித்துள்ளது, அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் அவரது குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாடு சிக்கலான நிலைமையில் இருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

அதனால் தற்போதைய அமைச்சரவையில் புதிய பதவிகள் எதுவும் உருவாக்கப்படக் கூடாது என்று நாம் பரிந்துரைக்கிறோம். அத்துடன் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படக்கூடாது. 
ஒரு குழுவாக நாங்கள் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்க மாட்டோம் என்றாலும், சர்வகட்சி அரசாங்கத்தின் யோசனையுடன் உடன்படுவோம். 

நாடாளுமன்றம் தொடர்பான துணை குழுக்களில் பணியாற்ற விரும்பும் அதேவேளை நாடாளுமன்றம் தொடர்பான விடயங்களில் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். 
தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கல்வியை மீட்டெடுப்பது முதன்மையான முன்னுரிமை திட்டமாக இருக்க வேண்டும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!