பிரித்தானியாவில் மாயமான இலங்கை வீரர்களில் இருவர் மீட்பு!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து காணாமல் போன இலங்கை தடகள வீரர்களில் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 161 பேர் கொண்ட இலங்கை அணியைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் மாயமானதை அடுத்து, இருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு மல்யுத்த வீரர், ஜூடோ வீராங்கனை மற்றும் ஜூடோ பயிற்சியாளர் திங்கட்கிழமை முதல் காணப்படவில்லை.

மூவரும் முன்னதாகவே தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்ததால் பிரித்தானியாவை விட்டு வெளியேற முடியவில்லை.

அவர்கள் காணாமல் போனதை அடுத்து, பர்மிங்காமில் உள்ள இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அதிகாரிகள் கடவுச்சீட்டுகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், காணமால் போனவர்களில் இரண்டு பேர் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸ் உறுதிப்படுத்தியது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் “இரண்டு பேர் 30 வயதுடைய ஒரு பெண் மற்றும் 40 வயதில் ஒரு ஆண், ஆகஸ்ட் 1-ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இருவரும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், “இன்று (ஆகஸ்ட் 4), 20 வயதில் மூன்றாவது நபரைக் காணவில்லை என்று எங்களுக்குப் புகார் வந்துள்ளது. அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.” என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!