நாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இளைஞர்களுடன் பயணியுங்கள்; முன்னாள் நிதியமைச்சர்

ஸ்ரீலங்காவில் 2015ல் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சனைகளை நாம் தீர்த்தோம். மக்கள் வரிசைகளை இல்லாது செய்தோம். எனினும் தற்போது மீண்டும் அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் யுகம் உருவாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு பின் இவை குறைக்கப்பட்டு வருகின்றன. வரிசை யுகத்தை முற்றாக இல்லாமல் செய்ய அவரால் மாத்திரமே முடியும். மேலும், விழுந்திருக்கும் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு என்னால் செய்ய முடியுமானவற்றை நான் ஒரு தனிநபராக செய்வேன். மேலும், சர்வகட்சி அரசாங்கம் என்பது காலத்தின் தேவை.

இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும், இதனை அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக செயல்முறை படுத்தக்கூடாது. மாறாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாகவும் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாகவும் செய்ய வேண்டும். தனித்தனி கட்சியாக யோசிக்காமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல வருடங்கள் தேவைப்படுகின்றன. எனினும், அவற்றை உடைத்து நாட்டை இல்லாமல் செய்ய ஐந்து நிமிடங்கள் போதும். எனவே, பழைய கதைகளை பேசாமல் இப்போது விழுந்த இடத்தில் இருந்து எப்படி எழும்புவது என்று நாம் பார்க்க வேண்டும்.

இருட்டில் இருக்கும் நாட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இளைஞர்களுடன் சேர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!