அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் அதிரடி சோதனை

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக புளோரிடா மாகாணத்தில் மர்-எ-லாகோ என்ற எஸ்டேட் உள்ளது. இந்த நிலையில் டிரம்ப்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முன் அறிவிப்பு ஏதுவுமின்றி இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதனை டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தார். அவர் கூறும்போது, “எனது மர்-எ-லாகோ எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் எப்.பி.ஐ. சோதனை நடத்தி வருகின்றனர். முன் அறிவிப்பின்றி சோதனை நடத்தும் அரசு அமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.

இச்சோதனை அவசியமோ அல்லது பொருத்தமானதோ அல்ல. அதிகாரிகள் என் பெட்டகத்தை உடைத்தார்கள். இது நமது தேசத்துக்கு இருண்ட காலங்கள். அமெரிக்க அதிபராக இருந்த ஒருவருக்கு இதற்கு முன்பு இது போன்று எதுவும் நடந்ததில்லை.

மூன்றாம் தர உலக நாடுகளில் மட்டுமே இத்தகைய தாக்குதல் நடத்த முடியும். துரதிருஷ்டவசமாக தற்போது அந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. இதற்கு முன்பு கண்டிராத அளவில் ஊழல் நிறைந்துள்ளது. இது மிக உயர்மட்ட அரசியல் இலக்கு நடவடிக்கை ஆகும். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை அவர்கள் தீவிரமாக விரும்பவில்லை. அமெரிக்க மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.

கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது சில ரகசிய ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.






* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!