மாணவர்களை காதலிக்க தூண்டிய பள்ளி ஆசிரியரால் பெற்றோர்கள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அருகேயுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்.

இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், பள்ளியில் பயின்று வரும் சக மாணவர்களிடம் இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது என்றும், அதேபோல் சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக பள்ளியில் பயின்று வரும் மாணவன் ஒருவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டுள்ளார்.

அதன்பேரில் இன்று காலை பள்ளிக்கு சென்ற பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் 10-ம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து குறிப்பிட்ட ஆசிரியர் முன்னிலையில் விசாரித்தனர்.

ஆசிரியர் நடந்துகொண்ட விதம் உண்மை என்று தெரிந்ததையடுத்து காவல் நிலையம், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு புகார் அளிக்கக்கூறி தலைமை ஆசிரியரிடம் ஊர் மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் நடந்து செல்லும்போது, அவர்களை ஆபாசமாக சித்தரித்து, சக மாணவர்களிடம் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த விவகாரம் பெரியதாக செல்வதை அறிந்த சில்மிஷ ஆசிரியர் தன் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என அனைவரின் பெயரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து ஒன்று கூடி பேசிய ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளி மாணவிகளின் நலன் கருதி, நாளை முதல் இப்பள்ளியில் அந்த ஆசிரியர் பணி செய்யக்கூடாது என்றும், பணி ஓய்வு பெறும் வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றும் கூறி விட்டு சென்று விட்டனர்.

அந்த ஆசிரியரும் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!