ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் X: புதிய அறிவிப்பு

ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போன் ஆன்லைன் தளங்களில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்புகளை நாட்டின் முன்னணி வலைத்தளங்கள் அறிவித்துள்ளன.

ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போன் ஆன்லைனில் விற்பனை துவங்கியதும் விற்று தீர்ந்த நிலையில் இன்று (நவம்பர்-18) இரவு மீண்டும் விற்பனைக்கு வரயிருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றிரவு 8.00 மணிக்கு ஐபோன் X மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.

முன்னதாக நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற விற்பனையில் ஐபோன் X சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏர்டெல் போன்றே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் ஐபோன் X விற்று தீர்ந்த நிலையில் மீண்டும் ஐபோன் X விற்பனை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஐபோன் X விற்று தீர்ந்ததாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஐபோன் X வாங்குவோருக்கு 70 சதவிகிதம் பைபேக் சலுகை வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ தளத்திலும் ஐபோன் X விற்பனை துவங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் தளத்தில் கிடைக்கும் ஐபோன் X ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அன்லாக் செய்யப்பட்ட சாதனமாக வழங்கப்படும் என்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே ஐபோன் X வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு ஏர்டெல் இலவசமாக விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் X ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் ரூ.89,000-இல் துவங்கி 256 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் மாடல் விலை ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெசல்-லெஸ் வடிவமைப்பு மற்றும் OLED ஸ்கிரீன் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் என்பதோடு ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்களை ஆப்பிள் வழங்கியுள்ளது. ட்ரூடெப்த் கேமரா மற்றும் இதர சென்சார்களின் உதவியோடு ஐபோனினை பார்த்தாலே அன்லாக் செய்யும் வசதியை வழங்குகிறது.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436×1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது.

முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X ஸ்மார்ட்போன் 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோனில் 12 எம்பி பிரைமரி டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,