தமிழர் ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தால் அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ரமேஷ் பத்திரன

இன,மத, சாதிய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்
.
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் நடந்த போராட்டம் நாட்டின் அரச தலைவரை மாற்றியது. அந்த போராட்டத்தில் நன்மையான பல விடயங்கள் இருந்தன. 21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தும் வகையில் இந்த நாட்டில் இன, மத, சாதிய பேதங்கள் இன்றி மக்கள் ஒன்றிணைந்திருந்தமை போராட்டத்தின் பிரதான அடையாளம் இருந்தது.

மிகவும் மகிழ்ச்சி. நாம் 21 ஆம் நூற்றாண்டை நோக்கி செல்ல வேண்டியது அவசியம். நாட்டில் இன,மத, சாதிய வாதங்களுடன் முன்நோக்கி செல்ல முடியாது.

இன,மத, சாதி வேறுபாடுகள் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டுமாயின் நாம் எமது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறைந்தது எமது நாட்டின் பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமரும் போது மன மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

முஸ்லிம் ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த மனநிலை இந்த நாட்டில் உருவாகவில்லை.

இந்த ஒற்றுமையை உருவாக்க அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புகளை செய்வது அவசியம். இழப்பீடுகளை செலுத்த வேண்டியும் ஏற்பட்டது. எனினும் அந்த மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியம். அதற்கு அனைவரது ஒத்துழைப்புகளும் அர்ப்பணிப்புகளும் தேவை எனவும் ரமேஷ் பத்திரன கூறியுள்ளார். 


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!